ரயில்வே இ.க்யூ., நடைமுறையில் மாற்றம்: ஒரு நாள் முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'ரயில்களில் அவசரமாக பயணிப்பதற்கு உதவும் இ.க்யூ., எனப்படும், 'எமர்ஜன்சி கோட்டா' விண்ணப்பங்களை இனி, ரயில்கள் புறப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டும்' என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு அட்டவணை தயாரிப்பு நேரத்தை ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் மாற்றியமைத்தது. அதன்படி, 4 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்பட்ட முன்பதிவு அட்டவணை, 8 மணி நேரத்திற்கு முன்பாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வி.ஐ.பி.,க்கள், ரயில்வே துறை அதிகாரிகள், அரசு துறைகளின் மூத்த அதிகாரிகள் கடைசி நேரத்தில் ரயிலில் பயணிக்க அதிக அளவில் இ.க்யூ., விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால், 8 மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு அட்டவணை தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் வைத்து, 'இனி இ.க்யூ., டிக்கெட் பெற விரும்புவோர், பயணம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவே அதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை: நள்ளிரவு 12:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை புறப்படும் ரயில்களில் இ.க்யூ., டிக்கெட் பெறுவதற்கான விண்ணப்பம், முந்தைய நாள் மதியம் 12:00 மணிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதே போல், மாலை 2:01 மணி முதல் நள்ளிரவு 23:59 வரை புறப்படும் ரயில்களில் இ.க்யூ., டிக்கெட் பெறுவதற்கான விண்ணப்பம், அதன் முந்தைய நாள் மாலை 4 மணிக்குள் வந்து சேர வேண்டும். ரயில் புறப்படும் நாள் அன்றே இ.க்யூ., டிக்கெட் வழங்கும் நடைமுறை இனி பின்பற்றப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த நேர மாற்றத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தான் சரியான நேரத்துக்கு இ.க்யூ., டிக்கெட் ஒதுக்க முடியும் என்றும் முன்பதிவு அட்டவணை தயாரிப்பில் தாமதம் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.