பெங்களூரு: பெங்களூரின், மந்த்ரி மால் அருகில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உருவச்சிலை அமைக்கும் திட்டத்துக்கு, பா.ஜ., பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார், நகரை சுற்றி ஆய்வு செய்த போது, மல்லேஸ்வரத்தின், மந்த்ரி மால் அருகில் இருந்த ராஜிவ் உருவச்சிலை, பணிகளுக்காக அகற்றப்பட்டதை கவனித்தார். உடனடியாக வேறு சிலை தயாரிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.இதன்படி மாநகராட்சி புதிதாக வெண்கல சிலை நிறுவ திட்டமிட்டது. ஹைதராபாதில், 15 அடி உயரமான ராஜிவின் வெண்கல சிலை தயாரானது. இதை டிரக்கில் கொண்டு வந்து, பெங்களூரின், மல்லேஸ்வரம் அருகில் நிறுவும் பணிகள் நடக்கின்றன.பெங்களூரு மாநகராட்சியின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:துணை முதல்வரின் உத்தரவுப்படி, முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை நிறுவப்படுகிறது. இந்த ஜங்ஷன், 1.5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது. சிலை நிறுவ துணை முதல்வர் சிவகுமார், தன் நிதியில் இருந்து 1.25 கோடி ரூபாய் நிதி வழங்கினார். படிகள், பீடம் உட்பட, 25 அடி உயரம் இருக்கும். இது கர்நாடகாவிலேயே, மிக உயரமான ராஜிவ் சிலையாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'எக்ஸ்' சமூக வலைதளத்தில், பா.ஜ., கூறியிருப்பதாவது:மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காதீர்கள் என, அரசு ஏற்கனவே அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும், அரசிடம் பணமில்லை. இத்தகைய சூழ்நிலையில், கர்நாடகாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ராஜிவ் சிலை அமைப்பது ஏன். இதற்கு காங்கிரசாரிடம் பதில் இல்லை. பொது மக்களின் பணத்தை, மனம் போனபடி செலவிடும் மனப்போக்கை காங்கிரசார் நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.