யமுனா விரைவு சாலையில் வாகன வேகம் குறைப்பு
கிரேட்டர் நொய்டா: பனிமூட்டம் அதிகரித்து வரும் நிலையில், யமுனா விரைவுச் சாலையில் சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாகனங்களுக்கான அதிகபட்ச வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டில்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களை இணைக்கும் யமுனா விரைவுச் சாலையில் இன்று முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை, வாகனங்களின் வேகம் மணிக்கு 100 கி.மீ., என்பதிலிருந்து மணிக்கு 75 கி.மீ., ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் அடர்ந்த பனிமூட்டம், பார்வை தெரிவுத் திறனைக் குறைப்பதால், சாலைகளில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க, யமுனா விரைவுச் சாலை பராமரிப்பாளரான, ‘ஜெய்பீ இன்ப்ராடெக் லிமிடெட்’ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து யமுனா விரைவுச் சாலையின் பல இடங்களில் அறிவிப்பு பலகைகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யமுனா விரைவுச்சாலையில் சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வாகன போக்குவரத்து அதிகரிக்கும். அதைக் கருத்தில் கொண்டு, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கும், பயணிகளுக்கு வசதியாக இருப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.