| ADDED : பிப் 22, 2024 01:41 AM
லக்னோ:உத்தர பிரதேசத்தில் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. உ.பி.,யில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி, தன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 17 இடங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாநிலத்தில் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும், இரண்டு பட்டியலை சமாஜ்வாதி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில், கட்சி தலைவர் அகிலேஷின் சித்தப்பாவான சிவ்பால் யாதவ் புடான் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது ஜஸ்வந்த் நகர் எம்.எல்.ஏ., பதவி வகிக்கிறார்.மேலும், வாரணாசியில் சுரேந்திர சிங் பாட்டீல், கைரானாவில் இக்ரா ஹசன், பரேலியில் பிரவீன் சிங் ஆரோன், ஹமிர்பூரில் அஜேந்திர சிங் ராஜ்புத் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.சமாஜ்வாதி உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.