சீரமைக்கப்பட்ட பஸ்கள் 4 லட்சம் கி.மீ., இயங்கும்
பெங்களூரு : ''கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் சீரமைக்கப்பட்ட மூன்று ஐராவத் கிளப் கிளாஸ் பஸ், கூடுதலாக 4 லட்சம் கி.மீ., இயங்கும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.பெங்களூரில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 63ம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட மூன்று ஐராவத் கிளப் கிளாஸ் பஸ் சேவையை, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் கடந்த நான்கு ஆண்டுகளாக காலியாக இருந்த பணிகள் நிரப்பப்படவில்லை. எங்கள் அரசு வந்து 18 மாதங்களில், 1,000 பணியிடங்களை நிரப்பி உள்ளது.அரசு கூறியபடி 5,800 புதிய பஸ்களில், 3,417 பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக சீரமைக்கப்பட்ட பஸ்கள், கூடுதலாக 4 லட்சம் கி.மீ., வரை இயக்கப்படும். இத் திட்டத்தை அமல்படுத்திய நிர்வாக மேலாளர் அன்புகுமாரின் பணி பாராட்டுக்குரியது. குடும்பநல திட்டத்தின் கீழ், பணியின் போது விபத்தில் இறந்தவர்களின் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் படிப்புக்கு உறுதுணையாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைவர் சீனிவாஸ், நிர்வாக இயக்குனர் அன்புகுமார், இயக்குனர் நந்தினி தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.கே.எஸ்.ஆர்.டி.சி., சார்பில் நிவாரண நிதி பெற்ற குடும்பத்தினருடன், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி. இடம்: பெங்களூரு.