இம்பால்: மணிப்பூரில், போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், கடந்தாண்டு மே மாதம் நடந்த கலவரத்துக்கு பின், இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில், சமீப காலமாக, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மாதத்தில் மட்டும் வன்முறை சம்பவங்களில், 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வெடி மருந்து நிரப்பப்பட்ட ராக்கெட், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக, ஆயுதமேந்திய குழுக்கள் சமீப காலமாக தாக்குதல் நடத்தி வருவது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது.இதையடுத்து, ட்ரோனை கண்டறிந்து தாக்கும் தொழில்நுட்பத்தை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தின் சாமுலாம்லான் என்ற பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட மூன்று ராக்கெட்டுகள், சக்தி வாய்ந்த கையெறி குண்டு கள் உள்ளிட்ட வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் வாயிலாக மிகப்பெரிய சதித் திட்டத்தை அவர்கள் முறியடித்தனர்.இதற்கிடையே, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, மணிப்பூரின் தேசிய புரட்சிகர முன்னணி சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள சந்தைகள், வணிக வளாகங்கள், அத்தியாவசிய கடைகள், வங்கிகள் மூடப்பட்டிருந்தன.பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அமைச்சரின் உதவியாளர் கடத்தல்
மணிப்பூர் நுகர்வோர் விவகார அமைச்சர் எல்.சுசிந்திரோவின் தனிப்பட்ட உதவியாளர் சோமேந்திரோ, 43, என்பவரை, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று முன்தினம் கடத்திச் சென்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.