UPDATED : ஆக 09, 2025 09:10 AM | ADDED : ஆக 09, 2025 06:33 AM
மும்பை: 'டிவி' நகைச்சுவை நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் சர்மா கனடாவில் நடத்தும் உணவக திறப்பு விழாவிற்கு, நடிகர் சல்மான் கானை அழைத்ததாலேயே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது. 'டிவி'யில், ஹிந்தி காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வருபவர் கபில் சர்மா. இவருக்கு, வட அமெரிக்க நாடான கனடாவின் சர்ரே என்ற இடத்தில் உணவகம் உள்ளது. கடந்த மாதம் 10-ம் தேதி இந்த உணவகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜித் சிங் பொறுப்பேற்றார். கபில் சர்மாவின் காமெடி நிகழ்ச்சியில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை மற்றும் அவர்களின் நடத்தை குறித்து தவறாக பேசப்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், 'கேப்ஸ் கபே' என்ற அந்த உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு என்.ஐ.ஏ., மற்றும் பஞ்சாப் போலீசால் தேடப்படும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மான் வேட்டையாடிய வழக்கு தொடர்பாக நடிகர் சல்மான் கானை, பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது. மும்பையில் அவர் வீடு மீதும் ஏற்கனவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சமீபத்தில், 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் திரையிடப்பட்ட, 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' என்ற நிகழ்ச்சியில் சல்மான் கான் தோன்றினார். மேலும், கனடாவில் நடந்த கபில் சர்மாவின் உணவக திறப்பு விழாவிற்கும் சல்மான் கான் சென்றிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிஷ்னோய் கும்பல், அந்த உணவகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தற்போது ஆடியோ வெளியிட்டு உள்ளது.