பஞ்சமசாலி சமுதாயத்தினர் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு ரூ.10,000 பரிசு
பெங்களூரு: 'பஞ்சமசாலி இட ஒதுக்கீடு போராட்டக்காரர்கள் மீது, தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு, மாநில காங்கிரஸ் அரசு, தலா 10,000 ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது' என பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றஞ்சாட்டினார்.இதுகுறித்து, 'எக்ஸ்' வலை தளத்தில் அவர் கூறியதாவது:காங்கிரஸ் அரசு, லிங்காயத் சமுதாயத்துக்கு எதிரானது. இட ஒதுக்கீடு கேட்டு பஞ்சமசாலி சமுதாயத்தினர் பெலகாவி சுவர்ண சவுதா முன் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவமதித்தனர்.தடியடி நடத்திய போலீசாருக்கு காங்கிரஸ் அரசு, தலா 10,000 ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டதே ஐ.பி.எஸ்., அதிகாரி ஹிதேந்திராதான்.போராட்டக்காரர்களை ஒடுக்க, ஐ.பி.எஸ்., அதிகாரியே நேரடியாக களமிறங்கியது, இதுவே முதன் முறையாகும். தான் செய்தது சரிதான் என, அவர் வாதிடுகிறார். நியாயமான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது, தடியடி நடத்திய அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.அன்று டி.ஜே. ஹள்ளி, கே.ஜி. ஹள்ளி கலவர வழக்கில், ஒரு சமுதாயத்தினர் மீது பதிவான வழக்குகளை, திரும்பப் பெறும் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டது. இன்று பஞ்சமசாலி சமுதாயத்தினரை ரத்தம் சிந்த வைத்தவர்களுக்கு பரிசு அறிவித்துள்ளது.மனிதநேயம் இல்லாத அதிகாரிகளின் பெயரை மறக்காதீர்கள். தடியடி நடத்தியவர்கள், இதை துாண்டிவிட்ட காங்கிரஸ் அரசை, பஞ்சமசாலிகள் மன்னிக்கமாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.