மஹா கும்ப நகர்: 'மஹா கும்பமேளா என்பது ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கைக்கானது. இதில் தேவையில்லாத விஷயங்களையோ, 5 ஸ்டார் கலாசாரமாகவோ சித்தரிக்க வேண்டாம்' என, சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா, கடந்த மாதம் 13ம் தேதி துவங்கி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. இந்தாண்டு, 40 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6ம் தேதி வரை, 39 கோடி பேர் வருகை தந்துள்ளதாக, உத்தர பிரதேச அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கும்பமேளா நிகழ்ச்சிகள் குறித்து உதாசின் அகாரா பந்துவா அமைப்பின் தலைவரான, ஹிந்து மத தலைவர் மஹந்த் தர்மேந்திர தாஸ் கூறிஉள்ளதாவது:மஹா கும்பமேளா என்பது பக்தர்களின் ஆன்மிக மற்றும் மத நம்பிக்கைக்கான திருவிழா; இது சாதுக்கள், பக்தர்கள் மற்றும் சனாதன தர்மத்தை பின்பற்றுவோரின் சங்கமம். இதை கவர்ச்சியின் மையமாக, 5 ஸ்டார் கலாசார மையமாக பார்க்கக் கூடாது.மாடலாக இருந்து சன்னியாசியான ஹர்ஷா ரிசாரியா, மாலை விற்கும் மோனலிசா, ஐ.ஐ.டி., பாபா அபய் சங், நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதுவா மஹா கும்ப மேளா? மஹா கும்பமேளாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் செயல்படுகின்றன. இது சாதுக்கள், ஆன்மிகவாதிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுபோல கூட்டத்தை சமாளிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் நதிக்கரையில், மணலில், திறந்த வெளியில் துாங்குகின்றனர். பஜனை செய்கின்றனர். புனித நீராடிய பின், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம், புண்ணிய நதியில் நீராடுவதுதான்.மவுனி அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 30 பேர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. இதற்கு முக்கிய காரணம், புனித நீராடுவதற்கு முண்டியடித்தது தான். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகவும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளார்; தினமும் கண்காணிக்கிறார்.ஆனால், அதிகாரிகள், போலீசார், வி.வி.ஐ.பி.,க்களையே கவனிக்கின்றனர். அல்லது தங்களுடைய குடும்பத்தாரை, உறவினர்களை, நண்பர்களை அழைத்து வந்து அவர்களை கவனிக்கின்றனர். ஒரு சில அதிகாரிகளின் மெத்தனமே, அந்த விபத்துக்கு காரணம்.மவுனி அமாவாசையன்று, நதியின் மீது அமைத்திருந்த பாலத்தை மூடுவதற்கு திடீரென உத்தரவிட்டனர். அதுவும், கூட்ட நெரிசலுக்கு காரணமாயிற்று. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும். மொத்தத்தில் ஆன்மிக தேடலுக்கான இந்த மஹா கும்பமேளாவை, கவர்ச்சிகரமானதாக ஊடகங்கள் காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
கும்பமேளாவுக்கு, பல கோடி பேர் வருவர் என்று எதிர்பார்க்கின்றனர். அதில், பெரும்பாலானோர் எந்தக் குறையையும் கூறுவதில்லை. ஆனால், சுற்றுலாபோல வருவோர், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக வருவோர் தான், அந்த வசதி இல்லை, இந்த வசதி இல்லை என்று கூறுகின்றனர்.
- மஹந்த் தர்மேந்திர தாஸ், ஹிந்து துறவி.