எஸ்.எம்.வி.டி., ரயில் முனையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி: தங்கும் வசதி இல்லாததால் பயணியர் அவதி
பையப்பனஹள்ளி : பெங்களூரு சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்திலும், அதன் அருகிலும் தங்குவதற்கு வசதி இல்லாமல், கொசுக்கடியிலும் குளிரிலும் வளாகத்திலேயே பயணியர் துாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.'இரவில் போதுமான பாதுகாப்பு வசதியும் இல்லை' என பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.பெங்களூரு நகரில், கே.எஸ்.ஆர்., எனும் கிராந்திவீரா சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையமும்; யஷ்வந்த்பூர் ரயில் நிலையமும் மிக பெரியது. நாட்டின் பல பகுதிகளுக்கும், இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகரிப்பு
ரயில் பயணியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு பையப்பனஹள்ளியில் எஸ்.எம்.வி.டி., எனும் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம் அமைக்கப் பட்டது.நாட்டின் தென் மாநிலங்களிலேயே 'ஏசி' வசதி கொண்ட ஒரே ரயில் முனையம் இது தான். பார்ப்பதற்கு விமான நிலையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. 314 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இந்த ரயில் முனையம், 2022 ஜூன் 6ம் தேதி பயன்பாட்டுக்கு வந்த பின், பல ரயில்கள்இங்கிருந்து இயக்குவதாகஅட்டவணை மாற்றப்பட்டது.தற்போது, நாள்தோறும் 40 ரயில்கள், சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து, வந்து செல்கின்றன. எதிர்காலத்தில் ரயில்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிப்படும் வாய்ப்பு உள்ளன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினந்தோறும் ஏராளமான பயணியர் வந்து, செல்கின்றனர். வசதியில்லை
சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம் பயன்பாட்டுக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயணியர் தங்குவதற்கு இடமே இல்லை. தென்மேற்கு ரயில்வே சார்பிலும் எந்த வசதியும்செய்யப்படவில்லை.ரயில் முனையத்தின் வெளிபுறத்திலும், ஹோட்டல், லாட்ஜ் வசதி இல்லை. இதனால், வேறு வழியின்றி ரயில் முனையத்தின் வளாகத்திலேயே பயணியர் படுத்துத் துாங்குகின்றனர்.குழந்தைகள், பெண்கள், முதியோர் அனைவருமே வெளியிலேயே படுத்து துாங்கும் அவலம் தொடர்கிறது.கொசுக்கடியையும்தாங்கிக் கொண்டுகுளிரையும் பொருட்படுத்தாது பயணியர் துாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பெரும்பாலும், ஏழை மக்கள் தான் இங்கு துாங்குகின்றனர். தங்களுக்கு போதுமான வசதிகள் செய்ய மாட்டார்களா என்று இவர்கள் ஏங்குகின்றனர்.இரவு நேரத்தில் பாதுகாப்பு வசதியும் குறைவாகவே உள்ளது. ஏராளமான பயணியர் வந்து,செல்லும் இடத்தில்,மெட்டல் டிடெக்டர் இருந்தும், யாரும் சோதனைசெய்வதில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.வெளிபுறத்தில் இரண்டு, மூன்று ஊர்காவல் படையினர் மட்டுமே அதிகாலை பொழுதில் தென்படுவதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிவாஜிநகருக்கு பஸ் வசதி எப்போது?
மெஜஸ்டிக், பனசங்கரி, சுப்பய்யனபாளையா, நாகவாரா, முனேனகொலலு கிராஸ், சில்க் போர்டு, பானஸ்வாடி, எலஹங்கா, சென்னசந்திரா உட்பட சில பகுதிகளுக்கு மட்டுமே சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து, பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.அதிக அளவில் பயணியர் வந்து செல்லும் சிவாஜிநகர் பஸ் நிலையத்துக்கு, ஒரே ஒரு பஸ் கூட இயக்கப்படுவதில்லை. இதனால், இந்த பகுதியைச் சேர்ந்த பயணியர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆட்டோ, டாக்சியில் தான் செல்ல வேண்டி உள்ளது. இல்லை என்றால், 2 கி.மீ., துாரம் நடந்து சென்று மாருதி சேவாநகரில் இருந்து பஸ்சில் செல்ல வேண்டும்.பி.எம்.டி.சி., நிர்வாக இயக்குனர் ராமசந்திரன் கூறுகையில், ''சர் எம்.விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் கூட புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்டன. சிவாஜிநகர் வழித்தடத்தில் புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் கண்டிப்பாக சிவாஜிநகருக்கு பி.எம்.டி.சி., பஸ் சேவை கிடைக்கும்,'' என்றார்.
ஒழுகும் மழைநீர்
வெளிப்புறத்தின் கூரையில் ஓட்டை விழுந்து, மழைநீர் ஒழுகுகிறது. மழை பெய்யும் போதெல்லாம், கூரையில் ஏற்பட்டுள்ள ஓட்டையில் இருந்து, தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. இதனால், அந்த இடத்தில் தண்ணீர் தேங்குகிறது. குழந்தைகள், முதியோர் நடக்கும் போது, சறுக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.