உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத் பூஜை கொண்டாட்டம் நிறைவு: முதல்வர் ரேகா குப்தா வழிபாடு

சத் பூஜை கொண்டாட்டம் நிறைவு: முதல்வர் ரேகா குப்தா வழிபாடு

புதுடில்லி: நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சத் பூஜை நிறைவடைந்தது. பீஹார், உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஆண்டு தோறும் தீபாவளிக்குப் பின் வரும் அமாவாசையை அடுத்து, நான்கு நாட்கள் சத் பூஜை பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடு கின்றனர். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சத் பூஜை நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று பூர்வாஞ்சலி மக்கள் குடும்பத்துடன் நீர் நிலைகளில் பூஜைப் பொருட்களை படைத்து, பால் மற்றும் புனித நீர் ஊற்றி சூரியனை வழிபட்டனர். தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு சத் பூஜை கொண்டாட்டதுக்காக, அரசு சார்பில் யமுனை நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிறப்பு கூடாரங்கள் மற்றும் படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான நீரில் மக்கள் சத் பூஜை வழிபாடு நடத்துவதற்காக, யமுனை நதியில் படர்ந்திருந்த நச்சு நுரை நீக்கபட்டது. நதிக்கரையில் குப்பை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மின் விளக்கு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. அதேபோல, டில்லி மாநகரின் பல இடங்களில் செயற்கை நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன. யமுனா படித்துறையில் நேற்று காலை இறுதி நாள் வழிபாட்டில் முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபாடு நடத்தினார். கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்தரராஜ் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய ரேகா குப்தா, “சத் பூஜை இவ்வளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுவதைப் பார்ப்பது திருப்தி அளிக்கிறது. கடந்த காலங்களில் யமுனை நதிக்கரையில் சத் பூஜை வழிபாடு நடத்த ஆம் ஆத்மி அரசு தடை விதித்தது . அதனால், டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சலி மக்கள் செயற்கை குளங்களில் சத் பூஜை வழிபாடு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். ''ஆனால், இந்த ஆண்டு புனித நதியான யமுனையில் நின்று, பூர்வாஞ்சலி சகோதர சகோதரிகள், சூரியனுக்கு நன்றி செலுத்தி சத் பூஜை வழிபாட்டை நிறைவு செய்து உள்ளனர்,”என்றார். தூய்மைப் பணி சத் பூஜை நேற்று காலை நிறைவடைந்த நிலையில், யமுனை நதிக்கரையை சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டது. வாசுதேவ் படித்துறையில் தூய்மைப் பணியை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார். குடிநீர் பாட்டில்கள், பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தினார். முதல்வருடன் அமைச்சர் கபில் மிஸ்ராவும் துாய் மைப் பணியில் பங்கேற்றா ர். அதேபோல, டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, மேயர் ராஜா இக்பால் சிங் ஆகியோர் யமுனை நதியின் படித்துறைகள் மற்றும் பூங்காக்களில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணி செய்தனர்.

பீஹாரில் பிரசாரம்

பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல் நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், முசாபர்பூர் மாவட்டம் போச்சாஹான், பாட்னாவின் தானாபூர், பாட்னா சாஹிப், மதுபன் மற்றும் ரோஹ்தாஸ் மாவட்டம் தினாரா ஆகிய ஐந்து தொகுதிகளில், நாளையும் நாளை மறுநாளும் பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம் செய்கிறார். பா.ஜ., ஆட்சி நடக்கும், 14 மாநிலங்களில் ஒரே பெண் முதல்வரான ரேகா குப்தா, அடுத்த வாரமும் பீஹாரின் பல தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி