மெட்ரோ நிலையங்களில் பாலுாட்ட தனி வசதி
பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில், குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி இடம் வசதி செய்ய, மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், தாய் ஒருவர் தன் குழந்தைக்கு பாலுாட்ட தனியிடம் கிடைக்காமல் பரிதவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவியது. பி.எம்.டி.சி., பஸ் நிலையங்களை போன்று, மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலுாட்ட, தனி வசதி செய்யும்படி பொது மக்கள் வலியுறுத்தினர்.இதன்படி மெட்ரோ நிறுவனம், முக்கியமான மெட்ரோ நிலையங்களில், குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி மையங்கள் அமைத்துள்ளது. மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர், கெங்கேரி, எலச்சனஹள்ளி, பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலுாட்டும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.நகரின் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இத்தகைய மையங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கிறோம். இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என, கணக்கு போடுகிறோம். இம்மையங்களை மெட்ரோ ஊழியர்கள் சுத்தமாக பராமரிக்கின்றனர்.மெட்ரோ நிலையங்களில் அமைக்கப்பட்ட மையங்கள், எட்டு அடி நீளம், எட்டு அடி அகலம் கொண்டதாகும். நீளமான பெஞ்ச் போடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு பெண்கள், குழந்தைகளுக்கு பாலுாட்டலாம், ஓய்வெடுக்கலாம்; மின் வசதி உள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.