அமைச்சர் பதவி வேண்டும் சிவலிங்கே கவுடா நெருக்கடி
பெங்களூரு: பெலகாவியில் சட்டசபை குளிர்க்கால கூட்டம் முடிந்த பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பதவிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் சித்தராமையா எரிச்சல் அடைந்துள்ளார்.கர்நாடகாவின் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். வெற்றி தகவலை கட்சி மேலடத்திடம் விவரிக்கும் நோக்கில், முதல்வரும், துணை முதல்வரும் டில்லிக்கு சென்று வந்தனர். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.டிசம்பரில் பெலகாவியின் சுவர்ண விதான் சவுதாவில் சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்த பின் அமைச்சரவை மாற்றப்படலாம் எனவும், சரியாக பணியாற்றாத அமைச்சர்கள், சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க, மேலிடம் ஆலோசிப்பதாகவும் தெரிகிறது. இதனால் எம்.எல்.ஏ.,க்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.மூத்த எம்.எல்.ஏ.,க்கள் தன்வீர் செய்ட், சிவலிங்கே கவுடா, சமீபத்தில் சென்னப்பட்டணா தொகுதியில் வெற்றி பெற்ற யோகேஸ்வர், பாலகிருஷ்ணா உட்பட பலர் அமைச்சர் பதவி எதிர்பார்க்கின்றனர்.ஹாசனில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், காங்., - எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடா பேசியதாவது:எனக்கு அமைச்சர் பதவி வேண்டும். அமைச்சரான பின் மாவட்ட அரசியல் மாற்றங்களை பாருங்கள். இந்த மாவட்டத்தில் நான் மட்டுமே, காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ., நானும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறேன்.ஏதோ ஒரு ஊரில், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன் நான். இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். என் சொந்த சக்தியால் வளர்ந்தேன். யாருடைய ஆசியாலும் வளரவில்லை. தொண்டர்களும், தொகுதி மக்களும் எனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, வலியுறுத்த வேண்டும்.ஹாசனில் பிரபலமான தலைவர்கள் தேவகவுடா, குமாரசாமியுடன் போராடி வெற்றி பெற்று வந்தேன். என்னை தோற்கடிக்க தேவகவுடா சக்கர நாற்காலியில் கிராமம், கிராமமாக செல்ல வேண்டும். எனது போராட்டம், பணிகளை கண்டு மக்கள் ஆதரித்தனர்.அனைவரும் சேர்ந்து மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்துங்கள். இதைபோன்று ஆயிரக்கணக்கான மாநாடுகள் நடத்தலாம். மாவட்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் கொண்டு வரலாம். மாநிலத்தில் நமது அரசு உள்ளது. நாம் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு பதவி கொடுக்காவிட்டால், மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.