உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் 24 மணி நேரத்தில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு: பணம் பறிக்கும் கும்பல் அட்டகாசம்

டில்லியில் 24 மணி நேரத்தில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு: பணம் பறிக்கும் கும்பல் அட்டகாசம்

புதுடில்லி: டில்லியில், 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் பணம் பறிக்கும் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அரசு அலுவலகங்கள் டில்லியில் இருப்பதால், அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

'சிசிடிவி' காட்சி

இந்த சூழலில், நராய்னா பகுதியில் செயல்பட்டு வரும் சொகுசு கார்கள் விற்பனை செய்யும் கடையில், நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மூன்று நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், அங்கிருந்த சில சொகுசு கார்கள் சேதமடைந்தன. முன்னதாக கடை உரிமையாளரிடம் அந்த கும்பல், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.சம்பவ இடத்தில் இருந்த, பயன்படுத்தப்பட்ட 25க்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். தப்பிச் சென்றவர்கள் வீசி சென்ற குறிப்புகளின்படி, அவர்கள் பணம் பறிக்கும் ஹிமான்ஷூ பாவ் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடையில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்திற்குள், மஹில்பால்பூர் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. நேற்று அதிகாலை 2:30 மணிக்கு அங்குள்ள ஹோட்டல் இம்ப்ரெஸ் முன், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஹோட்டலின் முகப்பு கண்ணாடி சேதமடைந்தது.

முதற்கட்ட விசாரணை

அடுத்ததாக, நேற்று காலை 9:30 மணிக்கு சுல்தான்பூர் மோரில் உள்ள ரோஷன் ஹால்வாய் இனிப்புக் கடை வாசலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், கடையில் இருந்த கண்ணாடி சேதமடைந்தது.மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீசார் விசாரணையில், பணம் பறிக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ