பாவகடாவில் சோலார் மின் உற்பத்தி திட்டம்
பெலகாவி: ''துமகூரு, பாவகடா தாலுகாவில், 10,000 ஏக்கர் பரப்பளவில், சோலார் மின்சார திட்டத்தை துவக்கியுள்ளோம்,'' என மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் திப்பேசாமியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது:ஏற்கனவே பாவகடாவில், இரண்டு ஏக்கரில், சோலார் மின்சாரம் உற்பத்தி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10,000 ஏக்கர் நிலத்தில் சோலார் உற்பத்தி துவங்க திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் திட்டத்தை செயல்படுத்த நிலம் வழங்க முன் வந்துள்ளனர். அவர்களிடம் குத்தகை அடிப்படையில் நிலம் பெறுவோம்.மதுகிரியில் சோலார் மின்சாரம் திட்டம் கொண்டு வர வேண்டும் என, அமைச்சர் ராஜண்ணா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அங்கு நிலம் கிடைக்காததால், பாவகடாவிலேயே திட்டத்தை செயல்படுத்த முன் வந்தோம்.மாநிலத்தில் மொத்தம் 18,407 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 6,662 மெகாவாட் மின்சாரம், அனல் மின் உற்பத்தி நிலையங்கள், 940 மெகாவாட் மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்கள், 674 சோலார் மின் உற்பத்தி நிலையம் என, வெவ்வேறு வழிகளில் மின்சாரம் பெறப்படுகிறது.மாநில விவசாயிகளின் நன்மைக்காக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகளுக்கு சோலார் பம்ப் செட்கள் பொருத்த திட்டமிட்டுள்ளோம். விவசாயிகள் சோலார் பம்ப் பொருத்த, மத்திய அரசு 30 சதவீதம், மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. விவசாயிகள் 20 சதவீதம் பணம் போட்டு, சோலார் பம்ப் செட் பொருத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.