டிவி சத்தத்தை குறைக்க சொன்ன தாயை கொடூரமாக கொன்ற மகன்
கான்பூர் : உத்தர பிரதேசத்தில், அதிக சத்தத்துடன், 'டிவி' பார்த்ததை கண்டித்த தாயை, கழுத்தை நெரித்து அவரது மகனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தின் ராவத்பூரைச் சேர்ந்தவர் ஊர்மிளா, 35. வாக்குவாதம்
இவரது கணவர், 17 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தன் 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதற்கிடையே, மார்க்கெட்டிங் பணியில் உள்ள ரஞ்சித் என்பவருடன் ஊர்மிளா அதே வீட்டில் 'லிவின் - இன்' முறையில் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ரஞ்சித், பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டார். ஊர்மிளாவின் இளைய மகன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். அப்போது அவரது மூத்த மகன் வீட்டில் இருந்த, 'டிவி'யில் ஸ்பீக்கரை இணைத்து அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டார்.இதனால் எரிச்சல் அடைந்த ஊர்மிளா, 'டிவி'யின் சத்தத்தை குறைக்கும்படி மகனிடம் கூறினார். எனினும், அதை பொருட்படுத்தாமல் அவரது மகன் பாடல்களை கேட்டு ரசித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஊர்மிளா, 'டிவி ஸ்பீக்கரை' உடைத்தார். இதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஊர்மிளா, தன் மகனின் கன்னத்தில் அறைந்தார். இதனால், கோபமடைந்த அவரது மகன், தன் தாயை அடித்ததுடன் பிடித்து கீழே தள்ளினார். இதில் ஊர்மிளாவுக்கு மூக்கில் ரத்தம் வழிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் மகன், ஊர்மிளாவின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினார். இதில், அவர் மயங்கி னார். விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், கட்டில் அடியில், பொருட்களை சேகரித்து வைக்கும் காலி இடத்தில், தாயை மறைத்து வைத்தார். இதற்கிடையே, பள்ளியில் இருந்து திரும்பிய இளைய மகன், தாயை வீடு முழுதும் தேடினார். அப்போது, தாயின் துப்பட்டாவின் பாகம் கட்டில் வெளியே தெரிந்ததை பார்த்து, கட்டிலின் அடிபாகத்தை திறந்தார். அங்கு தன் தாய் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்தனர். ஊர்மிளாவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த போலீசார், ஊர்மிளாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது மூத்த மகனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், தன் தாயை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.