| ADDED : டிச 06, 2024 03:49 PM
மும்பை: மும்பையில் புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கில் மர்ம நபர் ஸ்பிரே ஒன்றை அடிக்க, படம் சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டுக்கு போட்டி போடும் வகையில் உருவான படம் புஷ்பா. அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி சக்கை போடு போட்டது. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தயாரான புஷ்பா 2 படம் திரையரங்கில் நேற்று (டிச.5) ரிலீசாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.இந் நிலையில் மும்பையில் இந்த படம் வெளியான ஒரு தியேட்டரில் நிகழ்ந்த சம்பவத்தால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:மும்பை பாந்தராவில் உள்ள பிரபல திரையரங்கில் புஷ்பா 2 படம் வெளியானது. ரசிகர்கள் கூட்டத்தால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. படத்தை அனைவரும் ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இடைவேளை முடிந்து வெளியே சென்றிருந்த ரசிகர்கள் ஒவ்வொருவராக தமது இருக்கைக்கு திரும்ப ஆரம்பித்தனர். அந்த இடைப்பட்ட தருணத்தில் அரங்கில் இருந்த ஒருவர், தமது கையில் வைத்திருந்த ஸ்பிரே ஒன்றை அடித்துள்ளார்.அடுத்த சில நிமிடங்களில் உள்ளே இருந்தவர்களுக்கு திடீரென அசவுகரியம் ஏற்பட்டது. ஒருவர், பின் ஒருவராக இருமல், தும்மல், மூச்சு விட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். சிலருக்கு வாந்தியும், தலைசுற்றலும் ஏற்பட, அவர்கள் உடனடியாக தியேட்டரை விட்டு வெளியே வந்தனர்.ரசிகர்கள் நிலையை கண்ட தியேட்டர் நிர்வாகிகள் உடனடியாக படத்தை நிறுத்தி விட்டு, அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டனர். அதன் பின்னரே ரசிகர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இது குறித்து தகவலறிந்த போலீசார், தியேட்டர் சென்று அனைத்து பயணிகளிடம் சோதனை நடத்தினர்.சோதனையின் முடிவில் எதுவும் சிக்காத நிலையில் சுமார் 20 நிமிடங்கள் கழித்து பின்னர் மீண்டும் படம் திரையிடப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.