சண்டிகர்: சீக்கிய மதத்துக்கு எதிரான குற்றங்களை செய்ததாக கூறி, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலுக்கு, மதத் தலைவர்கள் குழு தண்டனை விதித்தது.பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். இவரது மகன் சுக்பீர் சிங் பாதல். முன்னாள் துணை முதல்வர். கடந்த 2007 முதல் 2017ம் ஆண்டு வரை, சிரோமணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காலத்தில், இவர்கள் இருவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவி வகித்தனர். அப்போது, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங், சீக்கிய மதத்தை நிந்தனை செய்யும் செயல்களில் ஈடுபட்டார்.அவருக்கு தண்டனை வழங்க செய்யாமல், மன்னிப்பு கிடைக்க ஏற்பாடு செய்ததாக, சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவரது கட்சியினர் மீது சீக்கிய மதத்தின் உயர் அதிகார அமைப்பான அகால் தக்த் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அந்த அமைப்பு, இன்று தண்டனையை அறிவித்தது.இதில், பாதல், பொற்கோவில் சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், பக்தர்களின் காலணிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமின்றி, வெவ்வேறு சீக்கிய புனித தலங்களிலும் இதே போன்று செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது.தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட சுக்பீர் சிங் பாதல், பொற்கோவிலில் இன்று மன்னிப்பு கோரினார். இந்த தண்டனை மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட, சீக்கிய சமுதாயத்தின் பெருமை என்ற பட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் அகால் தக்த் அமைப்பு இன்று அறிவித்தது.முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் ஆகியோருக்கு மட்டுமின்றி, அவர்களது அரசியல் அமைச்சர்களாக பதவி வகித்த அனைவருக்கும் இதேபோன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இத்தகைய தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.சீக்கிய மத அமைப்பு உத்தரவிட்டபடி, கட்சித் தலைவர் பதவியை ஏற்கனவே சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் படியும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தும் படியும் சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு இன்று அகால் தக்த் உத்தரவிட்டது.