உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி, பஞ்சாபில் வேட்புமனு தாக்கலில் முறைகேடு நடந்ததாக கூறி, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 13,937 பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கலில் முறைகேடு நடந்ததாக கூறி ஓட்டுப்பதிவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக பஞ்சாயத்து தேர்தல் வேட்புமனு தாக்கலில் முறைகேடு நடந்ததால் அக்., 15ல் நடக்க உள்ள தேர்தலை ரத்து செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அவற்றை தள்ளுபடி செய்தும், பஞ்சாயத்து தேர்தலை நடத்த அனுமதித்தும் உத்தரவிட்டிருந்தனர்.அப்போது ஓட்டுப்பதிவை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சின்னங்களை பயன்படுத்த கூடாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஓட்டுப்பதிவை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டனர்.அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:ஓட்டுப்பதிவு துவங்கி விட்ட நிலையில் தேர்தலை தடை செய்யக்கோரும் விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? அவ்வாறு தலையிட்டால் தேர்தலில் குழப்பம் ஏற்படும். இதை உணர்ந்து தான் உயர் நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்திருக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை