புதுடில்லி : டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அமலாக்கத் துறை அனைத்து வரம்புகளையும் மீறுவதாகவும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.தமிழகத்தில் மதுபானக் கடைகளை நடத்தும் மாநில அரசு நிறுவனமான டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக லஞ்ச ஒழிப்பு துறை, 41 வழக்குகளை பதிவு செய்தது. விசாரணை
அதன் அடிப்படையில், ஈ.டி., எனப்படும், மத்திய அரசின் அமலாக்கத்துறை, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நுழைந்தது.டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதிகாரிகளின் லேப்டாப், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் உள்ள 'டிஜிட்டல்' தகவல்கள் நகல் எடுக்கப்பட்டன. இந்த சோதனைக்கு பின், டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.சென்னை ஐகோர்ட்டை நாடிய தமிழக அரசு, அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணைக்கு தடை விதிக்க கேட்டது. ஐகோர்ட் அதை ஏற்கவில்லை. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஷி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் கபில் சிபல், டாஸ்மாக் சார்பில் முகுல் ரோஹத்கி ஆஜராகினர். அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு ஆஜரானார். வலியுறுத்தல்
''டாஸ்மாக் நிர்வாகத்தில் பண மோசடி நடப்பதாக, 2014- - 21 காலகட்டத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை 41 வழக்குகள் பதிவு செய்தது. அனைத்தும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீதானது; டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அல்ல. ''திடீரென அமலாக்கத்துறை 2025ல் இந்த வழக்குக்குள் வருகிறது. டாஸ்மாக் தலைமையகத்தில் சோதனை நடத்தி, அதிகாரிகளின் டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து, அவற்றிலுள்ள தகவல்களை நகல் எடுத்துள்ளது. இது தனிமனித உரிமை மீறல்,'' என்றார் கபில் சிபல். டாஸ்மாக் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் அதையே வலியுறுத்தினார்.தலைமை நீதிபதி கவாய்: தவறு செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனம். அதன் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? இதில், அமலாக்கத் துறை எல்லா வரம்புகளையும் மீறி உள்ளது தெரிகிறது. மத்திய அரசு வழக்கறிஞர் ராஜு: இல்லை, நீதிபதி அவர்களே. இது 1,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு. அட்லீஸ்ட் இதில் அமலாக்கத் துறை எந்த வரம்பையும் மீறவில்லை.இதை கேட்டதும் கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது. தலைமை நீதிபதி: அதற்கு தானே தமிழக லஞ்ச ஒழிப்பு துறை ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்து விசாரிக்கிறது. அமலாக்கத்துறை எதற்கு தேவையின்றி நுழைந்தது? ராஜு: டாஸ்மாக் ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும், அதில் நடந்துள்ள ஊழல், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டது. அவர்களை பாதுகாக்கவே இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதை கோர்ட் ஏற்கக்கூடாது. தலைமை நீதிபதி: அமலாக்கத் துறை ஒரு வழக்கில் நுழைவதானால், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும். டாஸ்மாக் விவகாரத்தில் அப்படி என்ன குற்றம், எங்கே, எப்போது நடந்திருக்கிறது என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டுமே. இந்த விஷயத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு, கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக இருக்கிறது.ராஜு: மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறோம். இதையடுத்து, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை மற்றும் சோதனைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். தமிழக அரசின் மனு மீது அமலாக்கத் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.கோடை விடுமுறைக்கு பின் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டது. மே 26ல் வழக்கமான விசாரணைகளுக்காக சுப்ரீம் கோர்ட் திறக்கப்படுகிறது.