உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பசுமை பட்டாசு விற்பனை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

டில்லியில் பசுமை பட்டாசு விற்பனை சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

புதுடில்லி:டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு விற்பனை தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. தலைநகர் டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசை கட்டுப்படுத்த பட்டாசு விற்கவும் வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், டில்லியில் பசுமைப் பட்டாசு தயாரிக்க அனுமதி கோரிய வழக்கை, செப். 26ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு அனுமதி பெற்ற உற்பத்தியாளர்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு தயாரிக்க அனுமதி அளித்தது. ஆனால், அதை விற்க அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கக் கோரி, டில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், மத்திய அரசு தரப்பில், விசாரணையை ஒத்திவைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பசுமை பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், 'தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த விவகாரத்தை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ