அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிேஷகத்தின் போது மங்களகரமாக ஒலிக்க இருப்பது அனைத்தும் தமிழகத்தில் உள்ள நாமக்கல்லைச் சேர்ந்த மணிகளாக இருக்கப் போகின்றன. ராம பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தேவையான நன்கொடைகளை வாரி வழங்கி வருகின்றனர். அப்படி கோவிலுக்கு தேவையான ஆலய மணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தெரிவித்து அனுமதியும் பெற்ற தொழிலதிபர் ராஜேந்திரன் கொடுத்த ஆர்டரின் படி, 70 கிலோ எடையில் ஐந்து மணிகளும், 60 கிலோ எடையில் ஆறு மணிகளும், 25 கிலோ எடையில் ஒரு மணியும், பூஜையின் போது பயன்படுத்தப்படும் பிடிமணிகள் 36 என மொத்தம், 48 மணிகள் நாமக்கல்லில் உள்ள கோவில் மணிகள் தயாரிப்பில் பிரபலமான ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸில் தயாரிக்கப்பட்டவை. இதன் உரிமையாளர்கள் ராஜேந்திரன், காளிதாஸ் கூறியதாவது: இந்த மணிகள் செய்வது பழக்கமானது என்றாலும், அதை 20 நாட்களில் தயார் செய்ய வேண்டும் என்பது தான் சவாலாக இருந்தது. அயோத்தி ராமர் கோவிலில் ஒலிக்கப் போகும் மணிகளை தயார் செய்யப் போகும் புனிதப் பணி என்பதால், எங்களுக்குள் கூடுதல் சக்தி வந்துவிட்டது. ராமரை வணங்கிவிட்டு வேலையைத் துவக்கினோம். பட்டறையில் 25 பேருடன் இரவு, பகலாக பாடுபட்டு மணிகளை தயார் செய்துவிட்டோம். மணிகளும், அதிலும் இருந்து வரும் ஒலியும் சிறப்பாக இருப்பதாக ஆர்டர் கொடுத்தவர்களும், சரி பார்த்தவர்களும் பாராட்டினர்; மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை போட்டுவிட்டு, மணிகள் அனைத்தையும் லாரியில் அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதே போல தமிழக பக்தர்களால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி, கோவிலுக்கான கட்டுமானப்பணி நடைபெறும் அயோத்தி கர்சேவக்புரத்தில் உள்ளது. இது பற்றி அங்குள்ள பொறுப்பாளர் கூறியதாவது: ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்ட இந்த மணி, 613 கிலோ எடை கொண்டதாகும். நான்கு அடி உயரம் கொண்ட இந்த மணி ஒலிக்கும் போது, அது நீண்ட துாரத்திற்கு கேட்கும்.ஒரு பெரிய லாரியில் இந்த மணியை கொண்டு வந்தனர்; கிரேன் வாயிலாகத் தான் இறக்கிவைத்தோம். இதை கொண்டு வந்தவர்கள் ராமேஸ்வரம் கோவிலில் இருந்து பூஜை போட்டுவிட்டு, இங்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டனர்.மற்றபடி இந்த மணியை யார் பெயரில் நன்கொடையாக வரவு வைக்க வேண்டும் என்று கேட்டபோது, தமிழக பக்தர்கள் என்று எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.5 லட்சம் லட்டு
பா.ஜ.,வைச் சேர்ந்த, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் நேற்று கூறுகையில், ''ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உஜ்ஜயினில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோவிலில் இருந்து ஐந்து லட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பப்படும். கும்பாபிஷேக விழா, ம.பி., முழுதும் கொண்டாடப்படும்,'' என்றார்.காவி கொடிகளுக்கு கிராக்கி
அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பகலிரவு பாராமல் நடக்கின்றன.கும்பாபிஷேகத்துக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.இது குறித்து, அயோத்தியில் காவி கொடிகள் உட்பட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர் முகேஷ் குமார் கூறியதாவது:அயோத்தியின் பல்வேறு இடங்களில் பூஜைகள் நடத்தப்படுவதால், காவி கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. ஒரு நாளைக்கு, 10,000 - 12,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.குறிப்பாக, கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. 50 - 1,000 ரூபாய் வரை என, அளவுக்கேற்ப காவி கொடி கிடைக்கிறது. தற்போது இந்த காவி கொடிகளை வாங்கி, பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் ஏற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -