பாட்னா: பீஹார் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவ., 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. கடந்த காலத்தை விட இம்முறை அதிக ஓட்டு சதவீதம் பதிவானது. அதிலும், ஆண்களை விட அதிக பெண் வாக்காளர்களே தங்களது ஓட்டுக்களை பதிவு செய்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.மதுபானி, பிஸ்பி, ஷியோஹர், ஹர்லகி, பேனிப்பட்டி, கஜவுலி, பாபுபர்ஹி, கியோட்டி, நர்பட்கஞ்ச், ஜலே, அராரியா, ஜோகிஹாட், சிக்டி, பகதூர்கஞ்ச், தாக்கூர் கஞ்ச்,கிஷன் கஞ்ச், கோச்சத்தமன், ராணிகஞ்ச்,போர்ப்ஸ்கஞ்ச், கதிஹார், கட்வா, பல்ராம்பூர், பிரான்பூர், மணிஹரி, பராரி, காஸ்பா , பன்மன்ஹி, ரூபாலி, தம்தாஹா, பூர்னியா, அமவுர், பைசி ஆகிய 32 தொகுதிகள் முஸ்லிம்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். இங்கு முஸ்லிம்கள் வழக்கமாக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஓட்டு வங்கியாக இருந்தனர். இதனால் அக்கட்சி வேட்பாளர்களே இங்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தனர்.ஆளுங்கட்சி நிலவரம்
ஆனால், இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் குறைந்தது 16 தொகுதிகளில் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதிலும், ஐஜத கட்சி வேட்பாளர்கள், இந்தத் தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதலாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி( ராம்விலாஸ்) கட்சி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.எதிர்க்கட்சி நிலவரம்
மறுபுறம், மகாகத்பந்தன் கூட்டணி ஓட்டு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் 2020 தேர்தலில் 18 இடங்களை பெற்றிருந்த ஆர்ஜேடி கட்சி, இம்முறை 11ல் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 6 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி 2 ல் மட்டுமே முன்னிலையில் உள்ளது.2022ம் ஆண்டு நடந்த சர்வேயில் பீஹார் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17.7 சதவீதம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.