நடிகர் சயீப் அலிகானுக்கு கத்திக்குத்து பயங்கரம் ! வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் வெறிச்செயல்
மும்பை, பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு படுக்கைக்கு சென்ற பின், நள்ளிரவு 2:30 மணிக்கு வீட்டு பணிப்பெண் அலறும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தபோது, கொள்ளையன் ஒருவன் ஒரு கோடி ரூபாய் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தான்.அவனை மடக்கிப் பிடிக்க சயீப் அலிகான் முயன்றார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், சயீப் அலிகானின் உடலில் ஆறு முறை அந்த கொள்ளையன் கத்தியால் குத்தினான்.சயீப் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும், கொள்ளையன் தப்பி ஓடினான். வீட்டு பணிப்பெண், சயீப் அலிகானை ஆட்டோவில் ஏற்றி லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் நடந்தபோது சயீப்பின் மனைவி கரீனா மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே தலைமையிலான குழுவினர், சயீப் அலிகானுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். பிளாஸ்டிக் சர்ஜரி
இது குறித்து டாக்டர் நிதின் டாங்கே கூறியதாவது:சயீப்பின் உடலில் ஆறு இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது. முதுகுத்தண்டுக்கு மிக அருகில் சிக்கி இருந்த 6 செ.மீ., கத்தியை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றினோம். அவரது இடது கை மற்றும் வலது பக்க கழுத்தில் ஆழமான காயம் இருந்தது. 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துள்ளோம்.அவர் தற்போது நலமுடன் உள்ளார். உடல்நிலை தேறி வருகிறார். இன்னும் ஓரிரு தினங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பார்.இவ்வாறு அவர் கூறினார். போலீசார் ஆய்வு
வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையனை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்படி, வீட்டுக் கதவை உடைத்தோ அல்லது வீட்டில் உள்ளவர்களை தாக்கியோ கொள்ளையன் உள்ளே நுழையவில்லை என்பது தெரியவந்துள்ளது. கத்திக்குத்து சம்பவம் நடந்த நள்ளிரவு 2:30 மணிக்கு முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பில் பதிவான இரண்டு மணி நேர கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு உள்ளே யாரும் நுழையவில்லை. குற்றவாளி முன்கூட்டியே வீட்டுக்குள் நுழைந்து, பதுங்கி இருந்து தாக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கத்திக்குத்து நடந்த மும்பை பாந்த்ரா பகுதியில் தான், மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், மூன்று நபர்களால் கடந்த ஆண்டு அக்டோபரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாதுகாப்பான நகரம்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் மிகவும் பாதுகாப்பானது மும்பை மட்டுமே. சில சமயங்களில் சில சம்பவங்கள் நடக்கத் தான் செய்யும். அவற்றை தீவிரமாக கவனத்தில் கொள்வோம். அதற்காக, மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது சரியல்ல.தேவேந்திர பட்னவிஸ்மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,
குற்றவாளி நுழைந்தது எப்படி?
சயீப்பை கத்தியால் குத்திவிட்டு குற்றவாளி தப்பி ஓடும் காட்சிகள், ஆறாவது மாடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த நபர், அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள மற்றொரு கட்டடத்தின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து குடியிருப்புக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும், சயீப் வீட்டில் பணியாற்றும் பணியாட்களுக்கு குற்றவாளியை தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களது உதவியுடன் குற்றவாளி வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
எதிர்க்கட்சியினர் குமுறல்!
இந்த சம்பவத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் - எஸ்.பி., பிரிவின் தலைவர் சரத் பவார் கூறுகையில், ''மஹாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. உள்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.சிவசேனா - உத்தவ் பிரிவின் எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், ''யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்கள் மட்டுமின்றி, தனியாக பாதுகாப்பு வைத்துள்ள பிரபலங்களுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை,'' என்றார்.