சுற்றுலா பயணியரை ஈர்க்கும் ஐவான் ஷாஹி பேலஸ்
மன்னராட்சியில் கட்டப்பட்ட, பெரும்பாலான அரண்மனைகள் இன்றைக்கும் மன்னராட்சியின் சிறப்புகளுக்கு அடையாள சின்னமாக விளங்குகின்றன. இவற்றில் நிஜாம்கள் கட்டிய அரண்மனையும் ஒன்றாகும். இந்த அரண்மனைக்குள் ரயில் போக்குவரத்து இருந்ததாம்.பல நுாறு ஆண்டுகளுக்கு முன், மன்னர்கள் கட்டிய பிரமாண்ட கோட்டைகள், அரண்மனைகள், கோவில்கள் இப்போதும், மன்னராட்சியின் சிறப்புகளை, இன்றைய தலைமுறையினரின் கண் முன்னே நிறுத்துகின்றன. இத்தகைய அரண்மனைகளில், கலபுரகியில் உள்ள ஐவான் ஷாஹி அரண்மனையும் ஒன்றாகும். நிஜாம்கள் இந்த அரண்மனைக்குள் வந்து செல்ல, சொந்தமாக ரயில் வைத்திருந்தனராம். கலபுரகியில் ஐவான் ஷாஹி விருந்தினர் இல்லம் அமைந்துள்ளது. இது நிஜாம்கள் ஆட்சியில் அரண்மனையாக இருந்தது. அரண்மனை அற்புதமான வடிவமைப்பு கொண்டது. இதில் நிஜாம்கள் வசித்தனர். கலை நயமிக்க அரண்மனையை, நிஜாம் வம்சத்து ஆறாவது மீர் பைபூப் அலி கான் கட்டியதாக, வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.அந்த காலத்தில், 'டெக்கான்' என்ற அதிவிரைவு ரயிலை, நிஜாம் மன்னர்கள் சொந்தமாக வைத்திருந்தனர். ஹைதராபாதில் இருந்து, ஐவான் ஷாஹி அரண்மனைக்கு நேரடி இணைப்பு ஏற்படுத்த, தண்டவாளம் அமைத்திருந்தனர். அரண்மனை உட்பகுதியிலேயே அன்று ரயில் தண்டவாளம் இருந்ததாம். ஹைதராபாதில் இருந்து, ரயிலில் அரண்மனைக்கு வந்தனர்.மன்னர்கள் பெரும்பாலும் ஓய்வெடுக்க, இந்த அரண்மனையை பயன்படுத்தினர். இப்போதும் பழைமை மாறாமல் அரண்மனை, விருந்தினர் இல்லமாக செயல்படுகிறது. அமைச்சர்கள் மட்டும் தங்க அனுமதி உள்ளது. பொது மக்கள் பார்வையிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கலபுரகிக்கு வந்தால் ஐவான் ஷாஹி அரண்மனையை காண மறக்காதீர்கள். - நமது நிருபர் -