உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புத்தம் தான் எதிர்காலம்; யுத்தம் அல்ல என்.ஆர்.ஐ., மாநாட்டில் பிரதமர் பேச்சு

புத்தம் தான் எதிர்காலம்; யுத்தம் அல்ல என்.ஆர்.ஐ., மாநாட்டில் பிரதமர் பேச்சு

புவனேஸ்வர் : “இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் நாட்டின் பாரம்பரியம் காரணமாக, 'யுத்தம் எதிர்காலம் அல்ல; புத்தம் தான் எதிர்காலம்' என்பதை சர்வதேச சமூகத்திடம் நம்மால் வலியுறுத்த முடிகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுவாழ் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, 'பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு' ஆண்டுதோறும் நடக்கிறது. இதன், 18வது மாநாடு ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.

பன்முகத்தன்மை

இந்த மூன்று நாள் மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று நடந்த இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:புலம்பெயர்ந்தோரை, அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்தியாவின் துாதர்களாகவே எப்போதும் கருதுகிறேன். நமக்கு பன்முகத்தன்மையை கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நம் வாழ்க்கையே பன்முகத்தன்மையில் தான் இயங்குகிறது. அதனால்தான், இந்தி யர்கள் எங்கு சென்றாலும், அந்த குறிப்பிட்ட நாட்டின், சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றனர். அந்த நாட்டின் விதிகள் மற்றும் மரபுகளை நாம் மதிக்கிறோம்.அந்த நாட்டிற்கும், அதன் சமூகத்திற்கும் நேர்மையாக சேவை செய்கிறோம். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கிறோம். அதே நேரத்தில் நம் இதயம், இந்தியாவை நினைத்தே துடித்துக் கொண்டிருக்கும்.புலம்பெயர்ந்த இந்தி யர்களால், நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் தலை நிமிர்ந்து செல்கிறேன். உலகம் முழுதும், உங்களிடம் இருந்து நான் பெற்ற அன்பு, பாசம், கவுரவத்தை நான் மறக்கவில்லை.

சமூக மதிப்பீடு

கடந்த 10 ஆண்டுகளில், உலகம் முழுதும் பல்வேறு தலைவர்களை நான் சந்தித்துள்ளேன். அங்கு வசிக்கும் இந்தியர்களை உலகத் தலைவர்கள் பாராட்டுகின்றனர். அவர்களின் சமூகத்திற்கு நீங்கள் சேர்க்கும் சமூக மதிப்பீடுகளே இதற்குக் காரணம்.இந்தியா சொல்வதை கேட்க உலகமே இன்று தயாராக உள்ளது. சொந்த கருத்துகளை மட்டுமின்றி, உலகளாவிய தெற்கின் கருத்துகளையும் இந்தியா முன்வைக்கிறது.வாளின் பலத்தால் பேரரசுகள் விரிவடைவதை உலகம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், அசோக பேரரசர் அமைதி வழியை தேர்ந்தெடுத்தார். இதுவே இந்திய பாரம்பரியத்தின் பலம்.எனவே தான், 'யுத்தம் எதிர்காலம் அல்ல; புத்தம் தான் எதிர்காலம்' என்பதை சர்வதேச சமூகத்திடம் நம்மால் வலியுறுத்த முடிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

'மோடி அரசை நம்புங்கள்!'

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “பாஸ்போர்ட் பெறுவது, புதுப்பிப்பது கடந்த 10 ஆண்டுகளில் எளிமையாக்கப்பட்டுள்ளது. துாதரக சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, நலத்திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன, குறைதீர்ப்பு நடைமுறைகள் வலுவாக்கப்பட்டுள்ளன. இக்கட்டான நேரங்களில், மோடி அரசு உங்களுக்காக உள்ளது என்பதை நீங்கள் உறுதியுடன் நம்பலாம்,” என்றார்.

சிறப்பு ரயில்!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக, பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு சுற்றுலா ரயிலை மத்திய அரசு இயக்குகிறது. இந்த ரயில், டில்லியின் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டு, நாட்டின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு மூன்று வார பயணம் மேற்கொள்கிறது. இந்த ரயிலை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கொடி அசைத்து நேற்று துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !