வீட்டில் இருந்த ஐ போனை எடுத்து மொபைல் டவர் மீது ஏறிய குரங்கு
தொட்டபல்லாபூர்: பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின் துாபகெரே கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதியில் திரியும் குரங்குகள், வீடுகளுக்குள் புகுந்து, கையில் கிடைத்ததை எடுத்துச் செல்கின்றன.சமைத்து வைத்திருக்கும் உணவை தின்கின்றன. உடைகளை கிழித்துப் போடுகின்றன. பழங்களை பறித்துச் செல்கின்றன. சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு, குரங்குகள் பெரும் தலைவலியாக உள்ளன. இதற்கிடையே நேற்று காலை, வீடு ஒன்றில் ஐபோனை சார்ஜரில் போட்டு வைத்திருந்தனர்.அங்கு வந்த குரங்கு, ஐபோனை எடுத்துக் கொண்டு, வீட்டின் அருகில் உள்ள மொபைல் டவர் மீது ஏறியது.பல மணி நேரம் ஆட்டம் காண்பித்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.போனை வாங்க முடியாமல் கிராமத்தினர் அலைபாய்ந்தனர். அதன்பின், குரங்கு போனை கீழே வீசி எறிந்தது.மேலிருந்து போட்டதால் ஐ போனின் டிஸ்ப்ளே உடைந்தது.குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்தும்படி, கிராமத்தினர் நீண்ட நாட்களாக வனத்துறையிடம் மன்றாடுகின்றனர். ஆனால் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை.