| ADDED : பிப் 13, 2024 07:00 AM
வில்சன் கார்டன்: போக்குவரத்து விதியை மீறிய, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்த, போக்குவரத்து போலீஸ்காரரின் கையை கடித்த வாலிபரிடம் விசாரணை நடக்கிறது.பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிமீறல் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலித்து வருகின்றனர்.நேற்றும் வில்சன் கார்டன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஒரு வாலிபர், ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை போலீஸ் ஏட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த வாலிபர், 'உறவினருக்கு உடல் நலம் சரியில்லாததால், அவரை பார்க்க அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறேன்' என்றார்.ஆனாலும் போலீஸ்காரர், அவரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த சாவியை பறித்தார். இதனால் கோபமடைந்த அந்நபர், போலீஸ்காரரின் கையை கடித்தார். வலி தாங்க முடியாமல் துடித்த அவரை, மற்ற போலீசார் மீட்டனர்.போலீசார் உடனடியாக ஹொய்சாளா ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அவர்கள், வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.