புதுடில்லி: “ஐ.நா., சபை, வழக்கொழிந்து போன பழைய நிறுவனத்தை போல செயல்படுகிறது. தற்போது நடந்து வரும் உலகின் மிகப்பெரிய இரண்டு மோதலை வெறும் பார்வையாளராக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் நடந்த கவுடில்யா பொருளாதார மாநாட்டில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது நடந்த கேள்வி - பதில் அமர்வில் அவர் பேசியதாவது:ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தி செல்லும் தலைமை பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற தான் பாகிஸ்தான் செல்கிறேன்.மாநாட்டில் பங்கேற்பது தான் நோக்கமே தவிர, இந்தியா - பாக்., உறவு குறித்து பேசுவது அல்ல. அதை இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இரண்டாம் உலகப் போருக்கு பின், 1945ல் ஐ.நா., சபை உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில், 50 நாடுகள் மட்டுமே அதில் அங்கம் வகித்தன. இப்போது அது நான்கு மடங்கு பெருகிவிட்டது.ஆனால், வழக்கொழிந்து போன ஒரு பழைய நிறுவனத்தை போல, ஐ.நா., சபை இன்று செயல்படுகிறது. சந்தையின் தேவைக்கு ஏற்ப செயல்படாமல், இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.மிக முக்கியமான பிரச்னைகளில் ஐ.நா., ஒதுங்கி நிற்கும்போது, நாடுகள் அதற்கு சுயமாக தீர்வு காண முயல்கின்றன.உதாரணத்திற்கு, கொரோனா தொற்று பரவலின் போது ஐ.நா., என்ன செய்தது? என்னை கேட்டால் எதுவுமே செய்யவில்லை என்று தான் சொல்வேன்.இப்போது, உலகளவில் இரண்டு மிகப்பெரிய மோதல்கள் நடக்கின்றன. அவை மிக தீவிரமாக உருவெடுத்துள்ளன. அதற்கு தீர்வு காண, ஐ.நா., என்ன செய்துள்ளது. வெறும் பார்வையாளராக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.இவ்வாறு அவர் பேசினார். சாதுர்யமான பதில்
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்கும் சுற்று நடந்தது. அதில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு, உடனடியாக தகுந்த பதில்களை அளித்து ஜெய்சங்கர் அசத்தினார்.ஜெய்சங்கரை மடக்கும் வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கேள்வியைக் கேட்டார். 'இரவு விருந்துக்கு கிம் ஜாங் உன் அல்லது ஜார்ஜ் சோரஸ் அழைப்பு விடுத்தால், அவர்களில் எந்த ஒருவருடன் பங்கேற்பீர்கள்' என, மடக்கினார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.“தற்போது நவராத்திரி காலம். அதனால் நான் விரதத்தில் இருக்கிறேன்,” என, சாதுர்யமாக பதிலளித்தார் ஜெய்சங்கர். இதையடுத்து, அரங்கத்தில் சிரிப்பொலி எழுந்தது.கிம் ஜாங் உன், ஆசிய நாடான வடகொரியாவின் அதிபர். ஜார்ஜ் சோரஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் நன்கொடையாளர். பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், பா.ஜ., குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தியாவுக்கு எதிராக செயல்பட, மதம் சார்ந்த பல அமைப்புகளுக்கு அவர் நிதியுதவி அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடர்ந்தது. இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் வாங்குவதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. ஆனால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை தொடர்ந்து வாங்கியது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.அப்போது அது குறித்து பதிலளித்த ஜெய்சங்கர், 'நம் எரிசக்தி பாதுகாப்புக்காகவே வாங்குகிறோம். நாம் ஒரு மாதத்துக்கு வாங்கும் எண்ணெய் அளவு, ஐரோப்பிய நாடுகள் ஒரு மாதத்துக்கு வாங்குவதைவிடக் குறைவு. முதலில் அவர்கள் வாங்குவதை நிறுத்திவிட்டு நம்மை விமர்சிக்கட்டும்' என, குறிப்பிட்டார்.
மாலத்தீவு அதிபருடன் சந்திப்பு
நம் அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேற்று டில்லி வந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்தக்கட்டமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரையும், முகமது முய்சு சந்தித்து பேசவுள்ளார். மும்பை, பெங்களூரு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு, மாலத்தீவு அதிபராக கடந்தாண்டு பதவியேற்றார். அங்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த நம் வீரர்களை வெளியேறும்படி அவர் உத்தரவிட்டது, இருதரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை விமர்சித்ததும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டில், மாலத்தீவு சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முகமது முய்சுவை சந்தித்து பேச்சு நடத்தினார். இதையடுத்து, முகமது முய்சு தற்போது நம் நாட்டிற்கு வந்துள்ளார்.