பெங்களூரில் இருந்து 70 கி.மீ., துாரத்திலும், கோலாரில் இருந்து 4 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது அந்தரகங்கே மலை.'அந்தரகங்கே' என்ற வார்த்தைக்கு கன்னடத்தில் 'ஆழத்திலிருந்து வரும் கங்கை' என்று பொருள். இம்மலையின் உச்சியில் காசி விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை 'தட்சிண காசி' அல்லது 'தெற்கு காசி' என்றும் அழைக்கின்றனர்.இம்மலையில் பல்வேறு அளவுகளில் ஏராளமான பாறைகள், அதைச் சுற்றி இயற்கையாகவே அமைய பெற்ற குகைகள் உள்ளன. இந்த மலையின் உச்சியில் இருந்து கோலார் நகரம் முழுதையும் பார்க்கலாம்.கோவிலில் பிரதான சிவலிங்கமும், பிரதான மண்டபத்தின் ஓரத்தில் நான்கு முதல் ஐந்து லிங்கங்களும் உள்ளன. இங்கு கொட்டும் நீர், சிவபெருமானின் தலையிலிருந்து விழும் புனித கங்கையும்; 365 நாட்களும் தீர்த்தம் கொட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.அந்தரகங்கேயிலிருந்து வரும் இந்த புனித நீர், மருத்துவ சிகிச்சைக்கும், நோய்கள் குணப்படுத்தும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் வழக்கமாக இந்நீரை அருந்துவர் அல்லது குளிப்பர்.இந்த மலை, கோவிலுக்கு மட்டுமல்ல மலையேற்றம், பாறை ஏறுதல், இரவு நேர பயணம் மற்றும் பிற சாகச நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடமாகும். இம்மலையில் பல காட்டு குரங்குகள் உள்ளன. புராணம்
புராணங்களின்படி, இம்மலை பரசுராமர் மற்றும் ஜமதக்னியுடன் தொடர்புடையது. பரசுராமரால் கார்த்தவீர்யார்ஜுனன் கொல்லப்பட்டதும், அதை தொடர்ந்து கார்த்தவீர்யார்ஜுனனின் மகன்களால் ஜமதக்னி கொல்லப்பட்டதும், ரேணுகா தாமாக தீக்குளித்ததும் இந்த மலையில் தானாம்.இந்த மலையில் தான் ஷத்திரிய இனத்தையே வேறுடன் அறுப்பதாக, பரசுராமர் சபதம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.இங்குள்ள குளம், பசவ (கல்லில் செதுக்கப்பட்ட காளை) வாயிலிருந்து வரும் வற்றாத நீரூற்று 'அந்தரகங்கே'யிலிருந்து தண்ணீரை பெறுகிறது. நீரின் ஆதாரம் அல்லது அது எங்கிருந்து உருவாகிறது என்பது இன்னும் தெரியவில்லை.மழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, காளையின் வாயிலிருந்து தண்ணீர் பீறிட்டுக் கொண்டே இருக்கும். படிக்கட்டுகள்
பிரதான நுழைவாயில் வழியாக 350- - 500 படிகள் ஏற வேண்டும். இந்த படிக்கட்டுகள் ஒரேயடியாக இல்லாமல், 15 படிகள் ஏறினால், சமமான அளவில் பாதை வரும். இதுபோன்று கோவில் அடையும் வரை மாறி, மாறி இருக்கும். இதனால் ஏறுவோருக்கு கால் வலி ஏற்படாது. ஆங்காங்கே ஓய்வெடுத்துச் செல்லலாம்.உச்சிப்பகுதியை அடைய, மற்றொரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.கோவிலுக்கு முன், இடது புறத்தில் சிவனின் மகனான முருகருக்கு சன்னிதி அமைந்துள்ளது. வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார்.கோவிலை அடைந்ததும், காசி விஸ்வேஸ்வரர் கோவில் முன், சிறிய தெப்பகுளம் உள்ளது. இந்த குளத்தில் நடுப்பகுதியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
செல்வது?
பெங்களூரிலிருந்து கோலாருக்குச் செல்லும் எந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் செல்லாம். கோலார் நகரை அடைந்ததும், அந்தரகங்கேவுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம். இரு சக்கர வாகனத்துக்கு 20 ரூபாயும், கார்களுக்கு, 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. - நமது நிருபர் -