ஹைதராபாத் ஏர்போர்ட்டுக்கு புலிகள் அமைப்பு பெயரில் மிரட்டல்
ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு, புலிகள் அமைப்பின் பெயரில், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, 'இண்டிகோ' விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று அதிகாலை, இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 'ஹைதராபாதில், 'இண்டிகோ' விமானம் தரையிறங்குவதை தடுக்கவும்' என்ற தலைப்பில், பபிதா ராஜன் என்பவரின், 'இ - மெயில்' முகவரியில் இருந்து அந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தில், இலங்கையின் புலிகள் அமைப்பினர் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் பயணிப்பதாகவும், அவர்கள் 1984ல் சென்னை விமான நிலையத்தில் நிகழ்த்தியது போன்ற வெடிகுண்டு தாக்குதலை நடத்த இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இத னால், விமான நிலையத்தில் ப ரபரப்பு ஏற்பட்டது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து ஹைதராபாதில் நேற்று தரையிறங்க வேண்டிய, 'இண்டிகோ' விமானம் மஹாராஷ்டிராவின் மும்பைக்கு தி ருப்பி விடப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.