UPDATED : டிச 01, 2025 11:51 AM | ADDED : டிச 01, 2025 11:43 AM
புதுடில்லி: ''எளிய பின்னணியை கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளது, நமது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுகிறது,'' என்று, ராஜ்யசபாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிச.,01) தொடங்கி, வரும் டிசம்பர் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதன் முதலாக ராஜ்யசபா தலைவராக தனது பணியை தொடங்கினார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். சிபிஆருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், ''இன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம். இன்று ராஜ்யசபா தலைவராக பணியை தொடங்கும் உங்களை மனதார வாழ்த்துகிறேன். அவை உறுப்பினர்கள் சார்பிலும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.''எளிய பின்புலத்தில் இருந்து துணை ஜனாதிபதி வரை பதவி உயர்வு பெற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனின் உயர்வு, ஜனநாயகத்தின் பலத்தை எடுத்துரைக்கிறது. தேசத்துக்காக உழைப்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,'' என புகழாரம் சூட்டினார்.லோக்சபா ஒத்திவைப்பு
அதேபோல், லோக்சபா கூடியதும் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட குறித்து விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கேட்கவில்லை. தொடர்ந்து, அவையை பிற்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.