போக்குவரத்து ஊழியர்கள் புத்தாண்டில் போராட்டம்
பெங்களூரு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக போக்குவரத்து கழகங்களின் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.ஊதிய உயர்வு, 'சக்தி' திட்டத்தின் பாக்கி பணத்தை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., வடமேற்கு போக்குவரத்து கழகம், கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகங்களின் ஊழியர்கள், டிசம்பர் 31 முதல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் ஏற்கனவே, போராட்டம் தொடர்பான பிரசுரங்கள் அச்சிட்டு, ஊழியர்கள், பயணியருக்கு வழங்கி போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.'ஜனவரி 1 முதல் பஸ் போக்குவரத்து இருக்காது. ஒத்துழைப்பு தாருங்கள். யாரும் பணிக்கு ஆஜராக கூடாது' என நடத்துனர்கள், ஓட்டுனர், மெக்கானிக்குகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டத்தால், பஸ்கள் இயங்காது. பொது மக்கள் பஸ்கள் இல்லாமல் அவதிப்படும் வாய்ப்புள்ளது.போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கங்கள் தலைவர்களுடன், அரசு பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால், போராட்டத்தை கை விட கூடும்.