துமகூரு: பதவிக்காலம் முடியும் தருவாயில், துமகூரு மாநகராட்சி கவுன்சிலர்கள், ஜனவரி 16 முதல் 20 வரை, நொய்டா, குர்கான் நகரங்களுக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராவது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.துமகூரு மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி காலம், ஜனவரி 29ல் முடிவடைகிறது. பதவி காலத்தின் இறுதி நாட்களில், மேயர் பிரபாவதி தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள், நொய்டா, குர்கான் நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகின்றனர்.ஜனவரி 16 முதல், 20 வரை ஐந்து நாட்கள், 35 கவுன்சிலர்கள், ஐந்து அதிகாரிகள், ஊழியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும். விமானத்தில் சென்று, வருவதுடன் நொய்டா, குர்கானுக்கு பின், டில்லியில் வரலாற்று சுற்றுலா இடங்களை பார்வையிட, பெங்களூரின் தனியார் டூர் அண்டு டிராவல்ஸ் நிறுவனத்துக்கு,சுற்றுலா பேக்கேஜ் டெண்டர் அளிக்கப்பட்டுள்ளது.இத்தனை நாட்களாக மவுனமாக இருந்து, பதவி காலம் முடியும் போது சுற்றுப்பயணம் மேற்கொள்வது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. வெளி மாநிலங்களில் செயல்படுத்திய திட்டங்கள், குப்பை பிரச்னை, அடிப்படை வசதிகள் உட்பட, மற்ற விஷயங்களை ஆய்வு செய்து, கவுன்சிலர்கள் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும்.'ஆனால் ஆட்சி காலத்தின் முடிவில், ஆய்வு செய்வதாலும், அறிக்கை தாக்கல் செய்வதாலும் என்ன பயன். மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதா' என, மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.