| ADDED : ஜூன் 11, 2024 03:53 PM
காஷ்மீரி கேட்: பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த சேனு கும்பலைச் சேர்ந்த இருவரை வடக்கு டில்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சேனு கும்பல் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த கும்பலுக்கு இர்பான் என்பவன் தலைவனாக செயல்பட்டு வருகிறான். இந்த கும்பலைச் சேர்ந்த இருவர் காரில் வருவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர்.காஷ்மீரி கேட் பகுதியில் ஒரு காரை போலீசார் மறித்து நிறுத்தினர். காரை நிறுத்தியவர்கள், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடத் துவங்கினர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், சேனு கும்பலைச் சேர்ந்த ஹாஜி இம்ரான், 41, அப்துல் ரஹ்மான், 38, என்பது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து மூன்று தோட்டாக்களுடன் இருந்த செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி, ஒரு தோட்டா கொண்ட நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த 2010ம் ஆண்டு முதல் கொலை, வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் இருவரும் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.கொலை வழக்கில் கைதாகி, மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த இம்ரான், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார். ஏராளமான வழக்குகள் தொடர்பாக இருவரும் தேடப்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.