மாண்டியா, : கெரேகோடு கிராமத்தில், ஹனுமன் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, மாண்டியாவில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த, மாண்டியா 'பந்த்' வாபஸ் பெறப்பட்டு உள்ளது.மாண்டியா அருகே கெரேகோடு கிராமத்தில், கொடிக்கம்பம் அமைத்து ஹனுமன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதற்கு அனுமதி பெறவில்லை என்று, கொடியை, மாவட்ட நிர்வாகம் அகற்றியது. இதனை கண்டித்து ஹிந்து அமைப்பினர், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தினர். மாண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றபோது, முதல்வர் சித்தராமையாவின் பேனர் மீது, கல் வீசப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால், கெரேகோடு, மாண்டியா போராட்ட களமாக மாறியது. அமைதியை நிலைநாட்ட...
இந்நிலையில் ஹனுமன் கொடியை இறக்கிய, அரசை கண்டித்து நாளை மறுநாள் மாண்டியாவில், முழு அடைப்பு போராட்டத்திற்கு, பஜ்ரங்தள், ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளன. இந்த முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாண்டியாவில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், தலித் சங்கம் உட்பட ஒருமித்த கருத்து கொண்ட, பல்வேறு சங்கங்கள், மாண்டியாவில் 7ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.இந்நிலையில் மாண்டியா கலெக்டர் குமார், எஸ்.பி., யத்தீஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, தலித் உட்பட பல்வேறு சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர். முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். 9ம் தேதி போராட்டம்
இதனை ஏற்றுக்கொண்டவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால், 9ம் தேதி ஹிந்து அமைப்புகள் அழைத்து உள்ள, முழு அடைப்பு போராட்டமும் நடக்க கூடாது. அப்படி நடந்தால் மறுபடியும், போராட்டத்திற்கு அழைப்பு விடுப்போம் என்றும் எச்சரித்து உள்ளனர்.