லக்னோ: மனித வேட்டையாடிய ஓநாய்களில் ஒன்று மட்டுமே பிடிபடவில்லை என உ.பி., வனத்துறை எண்ணியிருந்த நிலையில், இன்னொரு கூட்டம் ஊருக்குள் வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில், பஹ்ரைச் மாவட்டம், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் எல்லாம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அச்சத்துடன் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனத்தில் இருக்கும் ஓநாய்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்குவதும், கால்நடைகளை கொல்வதுமாக இருப்பதே இதற்கு காரணம்.ஓநாய்களின் தாக்குதலால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயம் அடைந்துள்ளனர். இதையடுத்து ஆபரேஷன் பேடியா என்ற ஓநாய்களை பிடிக்கும் பணியை மாநில வனத்துறை தொடங்கியது. தாக்குதல் நடத்திய 6 ஓநாய்களில் 5 ஓநாய்களை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். ஒரு ஓநாய் மட்டும் டிமிக்கி கொடுத்து வருகிறது. அதை பிடிக்கவும் தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர் உள்ளனர்.இந்நிலையில் மற்றொரு ஓநாய் கூட்டம் ஊருக்குள் புதிதாக வந்திருப்பது, கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.மீண்டுமா?
தனது பண்ணை வீட்டின் அருகே நான்கு ஓநாய்கள் காணப்பட்டன என பா.ஜ., வை சேர்ந்த சவுத்ரி கூறி பகீர் கிளப்பி உள்ளார். அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: பண்ணை வீட்டின் அருகே நான்கு ஓநாய்கள் காணப்பட்டன. அவை புதிய ஓநாய்கள். அவற்றில் ஒன்று நொண்டியாக இருந்தது. இந்த இடத்திற்கு அருகில் ஓநாய்களின் குகை உள்ளது. மழை மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதால், வன விலங்குகள் அடிக்கடி வெளியேறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.வனத்துறை விளக்கம்!
இது குறித்து தலைமை வனப்பாதுகாவலர் சிங் கூறி இருப்பதாவது; புதிதாக ஓநாய் கூட்டங்கள் கிராமத்திற்கு வந்ததாக தெரியவில்லை. அவற்றைப் பிடிப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. தெஹ்சில் ராம்கான் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ஓநாய்கள் காணப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், மனித வேட்டையாடும் ஓநாய் அவற்றில் இருந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை.அவற்றைப் பிடிக்க எடுக்கும் முயற்சிகள் புதிய சிக்கலை உருவாக்கலாம். அவை மனிதர்களைத் தாக்கத் துவங்கிவிடும். ஓநாய்கள் காணப்பட்ட பகுதியை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். முழுமையான ஆய்வுக்கு பின்னரே இவை எந்த வகையான ஓநாய்கள் என்பதை உறுதியாகக் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.