| ADDED : ஜன 24, 2024 01:13 AM
கொழும்பு, நம் அண்டை நாடான இலங்கையில் போர் நடந்தபோது, 1987ல் இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் வகையில், அந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இது, 13வது திருத்தம் என்று அழைக்கப்படுகிறது.இதன்படி, நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில், மாகாணத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், இலங்கைக்கான புதிய இந்தியத் துாதராக, சந்தோஷ் ஜா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரை, இலங்கையில் உள்ள தமிழ் தேசியவாத கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது, அதிகாரப் பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியா தலையிட வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.