ஹல்த்வானி: உத்தரகண்டில், ஹல்த்வானி நகரின் பன்புல்புராவில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, துணை ராணுவப் படையினரை அனுப்பும்படி அம்மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.உத்தரகண்ட் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி நகரின் பன்புல்புரா என்ற பகுதியில், சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த, 'மதரசா' எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வி குறித்து கற்றுத் தரும் கட்டடத்தை, சமீபத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அப்பகுதி மக்கள், பன்புல்புரா போலீஸ் ஸ்டேஷனை சூறையாடியதுடன், போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த கலவரத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஹல்த்வானி நகர் முழுதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பன்புல்புரா பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று, வன்முறையால் பாதிக்கப்பட்ட பன்புல்புரா பகுதியில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, துணை ராணுவப் படையினரை அனுப்பும்படி மத்திய அரசுக்கு உத்தரகண்ட் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.பன்புல்புராவில் ஏற்கனவே 1,100 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 400க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரை அனுப்பும்படி உத்தரகண்ட் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பன்புல்புரா பகுதியில் வதந்தி பரவுவதை தடுக்க, இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பன்புல்ரா பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.