விஜயபுரா விமான நிலைய பணிகள் முடிந்தும் திறப்பதில் சிக்கல்
விஜயபுரா; விஜயபுராவில் விமான நிலைய கட்டுமான பணிகள் முடிந்தும், இன்னும் திறந்து வைக்கவில்லை. விரைவில் விமான நிலையத்தை திறக்க, அரசு முயற்சிக்கிறது.கடந்த 2008ல், எடியூரப்பா முதல்வராக இருந்த போது, விஜயபுராவின், மதபாவி அருகில் விமான நிலையத்துக்கு பூமி பூஜை நடத்தினார். விவசாயிகள், தனியார் நபர்களின் 379.08 ஏக்கர், அரசின் 47.33 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் பணிகள் நடக்கவில்லை. எடியூரப்பா மீண்டும் முதல்வரான பின், விஜயபுரா, ஷிவமொக்காவில் விமான நிலைய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. விஜயபுராவில், முதற்கட்டமாக 220 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டன. அதன்பின் ஏர் பஸ் விமானங்கள், கார்கோ விமானங்களும் இயங்க வசதியாக, 125 கோடி ரூபாய் செலவில், பணிகள் விஸ்தரிக்கப்பட்டன. ரன்வே, டாக்சி வே, பயணியர் டெர்மினல் உட்பட அனைத்து பணிகளும் முடிந்துள்ளன.மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், விஜயபுரா விமான நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். விமான நிலையத்தில் தீ விபத்துகளை தடுக்கும் சாதனம் பொருத்தவில்லை என, கூறினர். இந்த வசதி செய்வதற்குள், அரசு மாறி காங்கிரஸ் அரசு வந்த பின், இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையே பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெறாமல், விமான நிலையம் கட்டியதாக, பெங்களூரை சேர்ந்த தொண்டு அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு விசாரணை கட்டத்தில் உள்ளது. இதனால் பணிகள் முடிந்தும், விமான நிலையத்தை திறந்து வைக்க முடியவில்லை. பணிகளை துவக்கும் போதே, பா.ஜ., அரசு பசுமை தீர்ப்பாயத்தில் முறைப்படி அனுமதி பெற்றிருந்தால், பிரச்னை ஏற்பட்டிருக்காது. இது தொடர்பாக, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியதாவது:பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி பெறாததால், விஜயபுரா விமான நிலையத்தை திறந்து வைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்திடம் கொண்டு சென்றுள்ளது. இது குறித்து வக்கீல்களிடம் பேசியுள்ளோம். பிப்ரவரி 19ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.இன்னும் இரண்டு மாதங்களில், பசுமை தீர்ப்பாயத்திடம் அனுமதி பெறப்படும். பின், விமான நிலையத்தை திறந்து வைப்போம். விமான நிலையத்துக்கு, பசவேஸ்வராவின் பெயர், சித்தேஸ்வர சுவாமிகளின் பெயரை சூட்டும்படி, வேண்டுகோள் வந்துள்ளது. விமான நிலையத்தை திறப்பதற்கு முன், பெயர் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.