| ADDED : ஜூலை 27, 2011 12:03 AM
மும்பை:மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய, முக்கியக் குற்றவாளி அஜ்மல் கசாப்பை
விரைவாக தூக்கிலிடக்கோரி, மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனா மற்றும் பா.ஜ.,
எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.மகாராஷ்டிர சட்டசபை நேற்று கூடியதும், சிவசேனா, பா.ஜ.,வை சேர்ந்த
எம்.எல்.ஏ.,க்கள் மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பை விரைவாக
தூக்கிலிடக் கோரி கோஷம் எழுப்பினர். கசாப்பை உடனடியாக தூக்கிலிட வேண்டும்,
இல்லையென்றால், பதவியில் இருப்பவர்கள் தங்கள் நாற்காலிகளைக் காலி செய்ய
வேண்டும் என்று கூறினர். இதனால், கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமளி நீடித்ததால்,
சபாநாயகர் திலீப் வால்சே, அவை நடவடிக்கைகளை, 10 நிமிடங்கள் ஒத்தி
வைத்தார். சட்டசபைக்கு வெளியிலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்
தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே கூறுகையில், பயங்கரவாதி
அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்துவதற்கான காரணத்தை,
எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். பின்னர், மீண்டும் அவை
கூடியதும், கடந்த 13 ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு
சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது.