தெருநாய்கள் வழக்கால் பிரபலமானோம் உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
திருவனந்தபுரம்: தெருநாய்கள் தொடர்பான வழக்கு தான் உலக அளவில் எங்களை பிரபலமாக்கிவிட்டது என, உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார். டில்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர்களும், நாய் பிரியர்களும் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிபதி விக்ரம் நாத் தலைமையில், நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இம்மனுக்களை கடந்த ஆக., 22ல் விசாரித்து, முந்தைய உத்தரவில் சில மாற்றங்களை செய்தது. 'பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்; தடுப்பூசி செலுத்த வேண்டும். அதன் பின் பிடிப்பட்ட இடத்திலேயே அவற்றை மீண்டும் விட்டு விட வேண்டும்' என புதிதாக உத்தரவு பிறப்பித்தது. இது, நாய் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், குரூர குணம் கொண்ட தெருநாய்கள் மற்றும் ரேபிஸ் நோய் கொண்ட நாய்களை வெளியே விடாமல் காப்பகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் மனித - வனவிலங்குகள் மோதல் குறித்த பிராந்திய கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நீதிபதி விக்ரம் நாத், தெருநாய்கள் தொடர்பான வழக்கு விசாரணையை தன்னிடம் ஒப்படைத்ததற்காக தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு நன்றி செலுத்துகிறேன் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது: சட்டத் துறையில் இருப்பவர்களுக்கு, என்னை நீண்ட ஆண்டுகளாக தெரியும். ஆனால், உலகறிய செய்தது தெருநாய்கள் தொடர்பான வழக்கு தான். இதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு நன்றி செலுத்துகிறேன். இவ்வழக்கில் நாய் பிரியர்களை கடந்து நாய்களும் எனக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி இருக்கிறது என கருதுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். வரும் 2027 பிப்., 10 முதல் 2027 செப்., 23 வரை விக்ரம் நாத் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.