வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆனால் பாகிஸ்தானிகளுக்கு ஆயுதங்கள் சப்லை செய்வோம் அப்படித்தானே
புதுடில்லி: கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியாவுடன் நல்லுறவு பேண மீண்டும் யாத்திரையை துவங்கியிருப்பதாக சீனா தெரிவித்து உள்ளது. பதிலுக்கு, 'கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; அது சச்சரவாக மாறிவிடக் கூடாது' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று டில்லி வந்தார். 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்திய - சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பி,ன் நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த 2024 அக்டோபரில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புடின் அழைப்பின் பேரில், கசான் சென்றிருந்த பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசியிருந்தார். இதனால், இரு நாட்டுக்கும் இடையே துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் துளிர்விட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அப்போது நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: நம் இரு நாட்டு உறவில் நிலவிய கடினமான காலங்கள் கடந்து விட்டன. புதிய துவக்கத்தை எதிர்பார்த்து இரு நாடுகளும் நெருங்கி வருகின்றன. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது சச்சரவாக மாறிவிடக் கூடாது. தற்போதைய சூழலில், உலகளாவிய பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை நீட்டிப்பது மிகவும் அவசியம். பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும், அதை வேரோடு அழிப்பது தான் முக்கிய லட்சியமாக இருக்க வேண்டும். இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகளுக்கான 24வது சுற்று பேச்சில் பங்கேற்க வந்துள்ள சீன பிரதிநிதிகள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த சந்திப்பு மூலம் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தற்போதைய சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப, பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் பற்றி பேசுவதற்கும் இதுவே தகுந்த தருணம். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி வருகின்றன. கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரையை இந்திய பக்தர்களுக்காக மீண்டும் துவங்கி உள்ளோம். இந்திய - சீன நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். பரஸ்பர வெற்றிக்கு பங்களித்து ஆசியா மற்றும் உலக நாடுகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இன்று நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்கிறார். இரு நாடுகளிடையே நிலவும் எல்லைப் பிரச்னை குறித்த 24வது சுற்று பேச்சில் பங்கேற்பதற்காக சீனா சார்பில் வாங் யீ, இந்தியா சார்பில் அஜித் தோவல் இருவரும் சிறப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பிரச்னை குறித்த விவாதத்திற்குப் பின், பிரதமர் மோடியையும் இன்று மாலை அவர் சந்திக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பாகிஸ்தானிகளுக்கு ஆயுதங்கள் சப்லை செய்வோம் அப்படித்தானே