உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஊழலுக்கு எதிரான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்!: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

 ஊழலுக்கு எதிரான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்!: பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

மீரட்: “எத்தனை தடை வந்தாலும் ஊழலுக்கு எதிரான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நாட்டிலேயே அதிக லோக்சபா தொகுதிகளை உடைய இங்கு, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக உத்தர பிரதேசத்தில் பா.ஜ., சார்பில் நடந்த அரசியல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார்.

போராட்டம்

மீரட்டில் நடந்த கூட்டத்தில், பா.ஜ., வேட்பாளரும், ராமாயணம் 'டிவி' தொடரில் ராமராக நடித்தவருமான அருண் கோவிலுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஊழலுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் மேலும் பேசியதாவது:என் தலைமையிலான அரசு, ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்தி வருகிறது. இதை எதிர்க்கும் விதமாக எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் சிலர் கொந்தளிக்கின்றனர். ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறேன். அதனால்தான், அவர்கள் இன்று சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்திலும் ஜாமின் கிடைக்காமல் அவர்கள் உள்ளனர். தேர்தல் என்பது இரண்டு முகாம்களுக்கு இடையிலான போர். ஒரு பக்கம் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றொரு பக்கம் ஊழல் தலைவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இண்டியா கூட்டணி. ஊழலை அகற்ற வேண்டுமா, வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஊழல் செய்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் மோடி மீது எத்தனை தாக்குதல்கள் நடத்தினாலும், மோடி மோடி தான். ஊழலை ஒழிக்கும் போரை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.

உத்தரவாதம்

எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிடம் கொள்ளை அடித்தவர்கள், நாட்டுக்கே அவற்றை திருப்பித் தர வேண்டும். தர வைப்பது தான் மோடியின் உத்தரவாதம். நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இந்த லோக்சபா தேர்தல், ஒரு அரசை உருவாக்குவதற்கு மட்டுமல்ல. 'விக்சித் பாரத்' எனப்படும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குமானது.என் அரசு, மூன்றாம் முறையாக நாட்டை ஆள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆட்சி அமைத்தபின், முதல் 100 நாட்களில் நாம் என்ன முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் வளர்ச்சியில் ஒரு ட்ரெயிலரை மட்டுமே பார்த்தீர்கள். இப்போது நாட்டை இன்னும் வேகமாக கொண்டு செல்ல வேண்டும். வறுமையில் பிறந்ததால் தான், ஏழையின் கஷ்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான், அவர்கள் கவலைகள் தீர திட்டங்கள் வகுத்துள்ளேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தது மட்டுமின்றி, அவர்களின் சுயமரியாதையும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின்போது, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில் பா.ஜ., கூட்டணியில் சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி, ஹரியானா முதல்வர் நாயப் சிங் சைனி, பா.ஜ., வேட்பாளர் அருண் கோவில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை