தங்கவயல்: கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் ஐந்து மட்டுமே தனி தொகுதிகள். இதில் கோலாரும் ஒன்று. இதில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் பங்கார்பேட்டை, முல்பாகல், தங்கவயல் ஆகிய மூன்றும் தனி தொகுதிகள் ஆகும். அம்பேத்கர் பவன்
தங்கவயல் ராபர்ட்சன் பேட்டையில் உள்ள பூங்காவில் அரசு நிதியில், 'அம்பேத்கர் பவன்' கட்டப்பட்டது. பூங்காவில் எந்த ஒரு கட்டடமும் கட்டக் கூடாது என்று சட்டம் உள்ளதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பூங்காவில் உள்ள அனைத்து கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, நகராட்சி நிர்வாகம் அப்பீல் செய்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இதேபோல, நுாற்றாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், வெவ்வேறு ஜாதியினர் உற்சவ கமிட்டி பெயரில் திருவிழா நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு பிரம்மோற்சவத்தில் தேர் எடுக்கும் உரிமை இல்லாததால் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த சம்பங்கி தங்கத் தேர் எடுக்க அனுமதி பெற்றார். 10 ஆண்டுகளாக பிரம்மோற்சவத்தின் 13வது நாள் தங்கத் தேரோட்டம் நடந்தது.இந்நிலையில், 'ஆகம விதிப்படி பிரம்மோற்சவம் 12 நாட்கள் மட்டுமே நடைபெற வேண்டும். 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்த முடியாது' என்று ரூபேஷ் குமார் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பில், '12 நாட்கள் மட்டுமே பிரம்மோற்சவம் நடக்க வேண்டும். அதிலும் ஜாதிகள் பெயரில் திருவிழா நடத்த கூடாது' என, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட போராட்டம்
இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் மட்டுமே, தங்கத் தேரோட்டம் நடக்குமா, இல்லையா என்பது தெரியும். இதில், சட்ட போராட்டம் நடத்த சம்பங்கி, களத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.கர்நாடகாவில் அம்பேத்கர் வந்து சென்ற இடங்களில், அவரின் நினைவாக அருங்காட்சியகம் அமைக்க தலா 5 ஏக்கர் நிலம், 2 கோடி ரூபாய் நிதியை பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு வழங்கியது. இதற்காக தங்கவயலில், பெமல் தொழிற்சாலை அருகில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி, சமூக நலத்துறையின் பொறுப்பில் 2 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது.ஆனால், அந்த இடத்தில் இதுவரை பணிகள் துவங்கவே இல்லை. இதற்காக வந்த 2 கோடி ரூபாய் நிதி திரும்பி சென்று விடுமோ அல்லது மாற்று திட்டத்துக்கு பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசுக்கு சொந்தமான தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் 80 சதவீதம் பேர் எஸ்.சி., பிரிவினர். இங்கு 25,000 வீடுகள் உள்ளன. இவற்றில் வசிக்கும் அனைவருமே தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு குடியிருக்கும் வீடுகளை குறைந்தபட்ச விலைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக, வழக்கம் போல அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் தருவதும், தேர்தல் முடிந்ததும் அதை மறந்து விடுவதும் வாடிக்கையாக உள்ளது. 'வரும் தேர்தலிலாவது, இந்த பிரச்னைகளை தீர்க்க வெற்றி பெறும் எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதே கோலார் தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.