2 ஏக்கர் சோயா பீன்ஸ் அழிப்பு மாஜி கணவர் மீது பெண் புகார்
ஹாவேரி: தன் வயலில் 2 ஏக்கர் சோயா பீன்ஸ் பயிர்களை இரவோடு, இரவாக அழித்ததாக, முன்னாள் கணவர் மீது, போலீசில் பெண் புகார் அளித்துள்ளார்.ஹாவேரி ஹனகல் வர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் ஹேமலதா என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக கருத்து வேறுபாட்டால், தம்பதி இடையில் அடிக்கடி, குடும்ப தகராறு ஏற்பட்டது.விவாகரத்து கோரி, ஹாவேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர். கடந்த ஆண்டு விவாகரத்து கிடைத்தது. அதன் பின்னரும் சதீஷ், ஹேமலதாவிடம் தொடர்ந்து தகராறு செய்து உள்ளார்.ஹேமலதா குடும்பத்தினர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில், சோயா பீன்ஸ் பயிரிட்டு வளர்த்தனர். சோயா பீன்ஸ்களை நாசப்படுத்துவேன் என்று, சதீஷ் அடிக்கடி மிரட்டி வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு, டிராக்டரை பயன்படுத்தி சோயா பீன்ஸ் பயிர்களை, மர்மநபர்கள் அழித்தனர். இதுதொடர்பாக சதீஷ் மீது நேற்று முன்தினம் இரவு, ஹனகல் போலீசில் ஹேமலதா புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.