உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் காங்கிரசை பெண் சக்தி வீழ்த்தும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சூளுரை

திரிணமுல் காங்கிரசை பெண் சக்தி வீழ்த்தும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சூளுரை

பராசத், ''வரும் லோக்சபா தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் மீதான சந்தேஷ்காலி மக்களின் எதிர்ப்பு அலை, மேற்கு வங்கம் முழுதும் வீசட்டும். இந்த தேர்தலில், அக்கட்சியை வீழ்த்துவதில், பெண்களின் சக்தி முக்கிய பங்கு வகிக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார். தமிழகம், தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்துக்கு நேற்று சென்றார். தலைநகர் கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், 15,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.நாட்டிலேயே முதன் முறையாக, நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து, மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி பயணம் செய்தார். இதன்படி, கோல்கட்டாவின் ஹவுரா மைதான்- - எஸ்பிளனேடு இடையே, ஹூக்ளி நதியின் கீழ், 520 மீட்டர் துாரத்துக்கு சுரங்கப்பாதை வாயிலாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஓட்டு வங்கி அரசியலுக்கு ஆளும் திரிணமுல் காங்., முன்னுரிமை அளித்து வருகிறது. ஏழை, தலித் மற்றும் பழங்குடியின குடும்பங்களின் பெண்களுக்கு எதிராக, திரிணமுல் காங்., நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால், மேற்கு வங்கத்தில் உள்ள பெண்கள் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் கொதித்தெழுந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில், திரிணமுல் காங்., மீதான சந்தேஷ்காலி மக்களின் எதிர்ப்பு அலை, மேற்கு வங்கம் முழுதும் வீசி அக்கட்சியை அழிக்கும்.மேலும், தேர்தலில் திரிணமுல் காங்கிரசை வீழ்த்துவதில், பெண்களின் சக்தி முக்கிய பங்கு வகிக்கும். பெண் சக்திக்கு கலங்கரை விளக்கமாக மேற்கு வங்கம் விளங்குகிறது. ஆனால், இந்த மண்ணி லேயே, திரிணமுல் காங்., ஆட்சியில் பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். பெண்கள் பாதுகாப்பில், மம்தா அரசுக்கு துளியும் அக்கறை இல்லை. சந்தேஷ்காலி குற்றவாளிகளை பாதுகாக்க, தன்னால் முடிந்த அனைத்தையும் திரிணமுல் காங்., செய்தது. எனினும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அக்கட்சி பின்னடைவை சந்தித்தது.மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் திரிணமுல் காங்கிரசை, மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். வரும் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணிக்கு, வாக்காளர்களாகிய நீங்கள் ஓட்டுகள் வாயிலாக பதிலடி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, சந்தேஷ்காலியில் இருந்து பெண்கள் பஸ்களில் சென்றனர். அந்த பஸ்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக பா.ஜ., குற்றம்சாட்டியது.

துவக்கம்

மேற்கு வங்க பயணத்தை முடித்த பிரதமர் மோடி, பீஹாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் பெட்டியாவில் நடந்த நிகழ்ச்சியில், 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், 109 கி.மீ., நீளமுள்ள முசாபர்பூர் - -மோதிஹாரி எல்.பி.ஜி., பைப்லைன் உட்பட பல திட்டங்களும் அடங்கும். இந்நிகழ்ச்சியில், மாநில முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை; இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.

சந்தேஷ்காலி கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாங்கள் அனுபவித்த துயரங்களை, பிரதமருடன் அவர்கள் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். பிரதமர் மோடியை சந்தித்த பெண்களில் ஒருவர் கூறுகையில், 'தந்தையைப் போல எங்களது பிரச்னைகளை பிரதமர் கேட்டறிந்தார். மேற்கு வங்க அரசு மீது நம்பிக்கை இல்லாததால், எங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும்படி அவரிடம் கோரிக்கை வைத்தோம். இதில், எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி