புதுடில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு அண்டை நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர், ஹமீத் கர்சாய் கூறியதாவது: இந்தியா தனது சிறந்த மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஒரு அசைக்க முடியாத கூட்டாளியாகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறியதாவது: மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் எனக்கு ஒரு நல்ல தந்தை போல் கருதுகிறேன். மாலத்தீவின் நல்ல நண்பராக இருந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: மன்மோகன் சிங் மறைவு இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் துக்கத்தின் தருணம். நமது இருதரப்பு உறவுகளில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஒரு பொருளாதார நிபுணராக அவரது நிபுணத்துவம் மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை எப்போதும் முக்கியமானது. எங்களுடைய சிந்தனைகள் மன்மோகன் சிங்யின் குடும்பத்தினருடனும், இந்திய மக்களுடனும் உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நல்ல நண்பர்
அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது: ஞானம் கொண்ட மனிதர் மன்மோகன் சிங். இவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். இந்தியாவின் பொருளாதார மாற்றத்தின் தலைமை சிற்பி. 2010ல் நான் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் சென்ற போது நான் சந்தித்த நல்ல தலைவர்களில் மன்மோகன் சிங் ஒருவர். இவர் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியதாவது: மன்மோகன் சிங் மறைவு இந்தியாவுக்கும், உலகத்திற்கும் பெரிய இழப்பாகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், உலக நாடுகளுடன் நட்புறவையும் உருவாக்க அவர் செய்த பங்களிப்பு மறக்க முடியாதவை. இந்தியா- அமெரிக்கா கூட்டாண்மையில் மிகச் சிறந்த சாதனையாளராக இருந்தார். அமெரிக்கா- இந்தியா நட்புறவுக்கான அவரது அர்ப்பணிப்பை நினைவில் கொள்வோம். இரு நாடுகள் இணைந்து சாதித்ததற்கு மன்மோகன் சிங்கின் பணி அடித்தளாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.