உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் துவக்கம்!: 700 லட்சம் டன் பொருட்களை சேமிக்க முடிவு

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் துவக்கம்!: 700 லட்சம் டன் பொருட்களை சேமிக்க முடிவு

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சேமித்து வைக்க உதவும் வகையில், நாடு முழுதும் ஆயிரக்கணக்கான தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். உலகிலேயே மிகப் பெரிய தானிய சேமிப்பு திட்டமான இதன் வாயிலாக, 700 லட்சம் டன் பொருட்களை சேமிக்க முடியும். இதற்காக, 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.புதுடில்லி: கூட்டுறவு அமைச்சகம் வாயிலாக பல்வேறு திட்டப் பணிகளை, திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், 11 மாநிலங்களில், 11 பி.ஏ.சி.எஸ்., எனப்படும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களின் கிடங்குகளை அவர் துவக்கி வைத்தார்.

தனி கவனம்

மேலும், 18,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தையும் அவர் துவக்கி வைத்தார். இதைத் தவிர, 500 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் கிடங்கு மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:விவசாயிகளுக்கு உதவும் வகையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, இந்தத் துறைக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது.நாடு தற்போது இறக்குமதி செய்யும் பொருட்களின் பட்டியல்களை கூட்டுறவு அமைப்புகள் எடுக்க வேண்டும். அவற்றை உள்நாட்டிலேயே விளைவிக்க, உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு மிகப் பெரும் பலன் கிடைக்கும். நன்கு திட்டமிட்டு, தேவைக்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்ய அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள் போதிய அளவில் இல்லாமல் இருந்தன.இந்தக் குறையை போக்கும் வகையில், நாடு முழுதும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தொடக்க வேளாண் கடன் சங்கங்களை, கம்ப்யூட்டர் வாயிலாக இணைக்கும் திட்டத்தையும் துவக்கிஉள்ளோம்.அடுத்த ஐந்து ஆண்டு களில் நாடு முழுதும், இரண்டு லட்சம் சங்கங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதில், மீன் வளம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கானவை அதிகமாக இருக்கும்.உலகிலேயே மிகப் பெரிய தானிய சேமிப்பு திட்டத்தை தற்போது துவக்கி உள்ளோம்.

வரப்பிரசாதம்

இதன் வாயிலாக, 700 லட்சம் டன் தானியங்களை சேமித்து வைக்க முடியும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான கிடங்குகள் உருவாக்கப்படும். இதற்காக, 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.இவை விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். தங்களுடைய விளைபொருட்களை இந்த கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, நல்ல விலை கிடைக்கும்போது அவற்றை அவர்கள் விற்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:உலகின் மிகப் பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் வாயிலாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் 100 சதவீத பொருட்களை பாதுகாப்பாக சேமிக்க முடியும்.தொடக்க வேளாண் கடன் சங்கங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, உணவு வினியோக சங்கிலி பாதுகாக்கப்படும். தடையில்லாமல் உணவு பொருட்கள் வினியோகம் நடக்கும்.நாடு முழுதும், 30,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டம், பொதுத் தேர்தலுக்கு முன் முடிக்கப்படும். இதைத் தவிர 65,000 சங்கங்கள், 2,500 கோடி ரூபாய் செலவில் கணினிமயமாக்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் மீது கடும் தாக்கு!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 34,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இவற்றை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளில், நம் நாடு மூன்றாவது இடத்தை பிடிக்க உள்ளது. அப்போது, சத்தீஸ்கரும் பெரும் வளர்ச்சியை பெற்றிருக்கும்.நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்தது. ஆனால், தங்களுடைய குடும்பம், ஊழல் மற்றும் குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டும் திருப்திபடுத்தும் அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இத்தனைக்கு பிறகும், அவர்களுக்கு மக்கள் மாறி மாறி வாய்ப்பு தந்தனர். தங்களுடைய சொந்த மகன், மகளைப் பற்றி மட்டுமே காங்கிரஸ் கவலைப்பட்டு வந்தது. நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்துகூட பார்த்ததில்லை. இதனால் தான், மக்கள் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.மோடி, உங்களுடைய குடும்பத்தில் ஒருவர். உங்களுடைய கனவு, மோடியின் கனவு. அதனால் தான், நாட்டின் வளர்ச்சி குறித்தும், சத்தீஸ்கர் வளர்ச்சி குறித்தும் உங்களைப் போல நானும் கவலைப்படுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை