இடுக்கி அணையை நடந்து சென்று ரசிக்கலாம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது
மூணாறு: இடுக்கி அணையை அடுத்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று ரசிக்கலாம் என கேரள நீர் வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்தார். இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அணையில் பல்வேறு பணிகள் செய்ய ஜூன் 1 முதல் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓணம் செப்.5ல் கொண்டாடப்பட்டதால், செப்.1 முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் நடக்கும் புதன் கிழமை, மழை முன்னெச்சரிக்கை ஆகிய நாட்களில் பயணிகளுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பு கருதி மின்வாரியம் சார்பிலான பேட்டரி கார்களில் பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பெரியவர்களுக்கு ரூ.150, சிறுவர்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் 800 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆலோசனை இடுக்கி சட்டசபை தொகுதியில் மின்வாரியம் சார்பிலான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து திருவனந்தபுரத்தில் மின்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டியுடன், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் ஆலோசனை நடத்தினார். அப்போது இடுக்கி அணையை பார்க்க பயணிகள் நடந்து செல்ல அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இடுக்கி அணையை பார்க்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அடுத்த மாதம் முதல் நடந்து சென்று பயணிகள் ரசிக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கான நுழைவுக்கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்பட உள்ளது.